ரூ.3 கோடி செலவிலான மராமத்துக்கு பின்னரும் அகண்ட கவுசிகா நதி ஆடு தாண்டும் ஓடையாக மாறிய அவலம்


ரூ.3 கோடி செலவிலான மராமத்துக்கு பின்னரும் அகண்ட கவுசிகா நதி ஆடு தாண்டும் ஓடையாக மாறிய அவலம்
x
தினத்தந்தி 27 Aug 2018 3:30 AM IST (Updated: 27 Aug 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் உள்ள கவுசிகாநதியில் ரூ.3 கோடி செலவில் மராமத்து பணி மேற்கொள்ளப்பட்ட பின்னரும் அகண்ட இந்த நதி ஆடு தாண்டும் ஓடையாக மாறிவிட்ட அவலம் ஏற்பட்டுள்ள நிலையில் நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் அருகே உள்ள வட மலைக்குறிச்சியில் இருந்து கண்மாயில் பெருகும் உபரி நீர் கவுசிகாநதியாக விருதுநகர் வழியாக ஓடி குல்லூர் சந்தை அணையை சென்று அடைகிறது. கடந்த காலங்களில் பருவமழை குறிப்பிட்ட அளவு பெய்து வந்த நிலையில் எப்போதும் நீர் ஓடிக்கொண்டு இருந்த இந்த நதியில் தற்போது மழை பொய்த்துவிட்ட நிலையில் கழிவுநீரே தேங்கி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்த நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஓடும் பகுதியை தூர் வாரி மராமத்து செய்ய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் அரசு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பேரில் பொதுப்பணித்துறையினர் இந்த பணியை மேற்கொண்டனர். நதியின் இருபுறமும் கரையை பலப்படுத்தவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்த போதிலும், மராமத்து பணி முறையாக நடக்கவில்லை.

இதனால் அகண்ட இந்த நதி பல இடங்களில் ஆக்கிரமிப்புகளால் ஆடு தாண்டும் ஓடையாக மாறிய அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் நதியின் நீர் போக்கு பகுதியில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளன. மேலும் கரையின் இருபுறமும் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் இந்த நதியில் விடப்படுவதால் தற்போது உள்ள நிலையில் கழிவுநீரே கவுசிகா நதியில் தேங்கி நிற்கும் நிலை உள்ளது.

பொதுப்பணித்துறையினர் அரசு உத்தரவிட்டபடி நதியின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. மேலும் நதியின் உட்பகுதியில் புதராக உள்ள சீமைக்கருவேல மரங்களையும் முற்றிலுமாக அகற்ற பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மராமத்து பணிக்காக அரசு ஒதுக்கிய ரூ.3 கோடியும் செலவழிக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டாலும் அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக கவுசிகாநிதியின் இருபுற ஆக்கிரமிப்புகளை அகற்றி நதியின் உடப்பகுதியை தூர்வாரி முழுமையான மராமத்து பணியை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதால் நகரில் சுகாதார சீர் கேடு ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே நகர் மக்களின் நலன் கருதி இந்த நதியை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story