வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண பொருட்கள்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:00 AM IST (Updated: 27 Aug 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு அரசியல் கட்சியினர் நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை,

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதையடுத்து பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் நிதியுதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை நகர காங்கிரஸ் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் முருகேசன், நகர தலைவர் இப்ராகிம்பாபு உள்பட கட்சி நிர்வாகிகள் புதுக்கோட்டை கீழ ராஜவீதியில் உள்ள கடைகளில் வெள்ள நிவாரண பொருட்களை சேகரித்தனர். இதையடுத்து சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கேரளாவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்ட 10 டன் அரிசி, புதிய ஆடைகள், பாத்திரங்கள், மளிகை பொருட்கள் போன்றவற்றை ஒரு லாரியில் ஏற்றி கேரளாவிற்கு அனுப்பி வைத்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணமேல்குடி பகுதி இளைஞர்கள் ஒன்றாக இணைந்து மணமேல்குடி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கேரள வெள்ள நிவாரணத்திற்காக ரூ.15 ஆயிரம் வசூல் செய்தனர். பின்னர் அந்த பணம் கேரள முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

Next Story