தேங்காய் நார் கட்டிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு


தேங்காய் நார் கட்டிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு
x
தினத்தந்தி 27 Aug 2018 4:15 AM IST (Updated: 27 Aug 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

தேங்காய் நார் கட்டிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் தென்னை நார் உற்பத்தியாளர்கள் சார்பில், ‘ஈரோடு அன்டு திருப்பூர் டிஸ்ட்ரிக்ட் கோக்நெட் பைபர் அன்டு பித் பிளாக் மேனுபேக்சர்ஸ் அசோசியேசன்‘ என்ற சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் தொழில் வளர்ச்சி விளக்க கூட்டம் ஈரோடு ஈடிசியா அரங்கில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு சங்க தலைவர் பி.பூச்சாமி தலைமை தாங்கினார். சங்கத்தின் புதிய உறுப்பினர்களை சங்க செயலாளர் பி.தனசேகரன் அறிமுகப்படுத்தி வைத்தார். சங்கத்தின் கணக்குகளை பொருளாளர் பி.சதாசிவம் தாக்கல் செய்தார். கூட்டத்தில் இந்திய அரசின் கயிறு வாரிய வளர்ச்சி அதிகாரி ஜி.பூபாலன், ஆடிட்டர் சி.செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

* தேங்காய் நார் கட்டி என்பது மதிப்பு கூட்டப்பட்ட பொருள் அல்ல, தேங்காய் நாரினை வெவ்வேறு இடங்களுக்கு எடுத்துச்செல்ல வசதியாகவே கட்டியாக செய்யப்பட்டு வருகிறது. எனவே தேங்காய் நார் கட்டிகளுக்கு சரக்கு மற்றும் சேவை வரியில்(ஜி.எஸ்.டி.) இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

* கயிறு தொழிலுக்கு மூலப்பொருளான தேங்காய் மட்டை மிகவும் தட்டுப்பாடாக உள்ளது. எனவே வறட்சியிலும் அதிக மகசூல் கொடுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள தென்னங்கன்றுகளை உற்பத்தி செய்து தென்னை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசின் கயிறு வாரியம் நிதி ஒதுக்கி சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

* தென்னை நார் தொழிற்சாலைகளில் வெயில் காலங்களில் அடிக்கடி தீவிபத்துகள் ஏற்படுவதால், பெரும் பொருட்சேதமாகிறது. எனவே இதுபோன்ற விபத்துகளின் போது தென்னை நார் உற்பத்தி தொழிலை காப்பாற்றும் வகையில் கயிறு வாரியம் மூலம் காப்பீட்டு திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

* தேங்காய் நார் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உள்நாட்டில் சந்தை படுத்த ஈரோடு மற்றும் திருப்பூர் நகரங்களில் ஷோரூம் திறக்க வேண்டும்.

* கயிறு உற்பத்தி தொழிற்சாலைகளிலும் காங்கிரீட் தளம் அமைக்க மத்திய அரசின் கயிறுவாரியம் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்க ஆவன செய்ய வேண்டும்.

என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க தலைவர் பி.பூச்சாமி பேசும்போது, ‘தென்னை நார் தொழில் மேம்பாட்டுக்காக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் வைத்து இருக்கிறோம். இந்தநிலையில் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை தம்பிரான் வலசு பகுதியில் 3 ஏக்கர் நிலத்தை சங்கம் சார்பில் வாங்கி இருக்கிறோம். இங்கு மதிப்பு கூட்டப்பட்ட தேங்காய்நார் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் ஒருங்கிணைந்த உற்பத்தி குழுமும் தொடங்கப்பட உள்ளது. தமிழக அரசின் பங்களிப்போடு எங்கள் சங்கம் இந்த திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. தென்னை நாரினை மூலப்பொருளாக கொண்டு கால்மிதியடிகள், கிரிக்கெட் மேட்டுகள், தரை விரிப்புகள், மண் அரிப்பினை தடுக்கும் கயிறுவலைகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கி வரும் தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளும் வளர்ச்சி அடையும்’ என்றார்.


Next Story