பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பை பெற புதிய பாடத்திட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பை பெற புதிய பாடத்திட்டம் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:30 AM IST (Updated: 27 Aug 2018 3:16 AM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 முடித்தவுடன் மாணவர்கள் வேலை வாய்ப்பை பெற புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி கல்வித்துறை மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் மாவட்ட அளவிலான அம்மா விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. இதன் தொடக்க விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வரவேற்றார். அசோக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து, போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் அதிக அளவில் விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, விளையாட்டுக்கென பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். பள்ளி கல்வித்துறை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடைகள் மாற்றப்பட்டது போல, வரும் ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் சீருடை மாற்றப்படும்.

மேலும் அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த வாரம் இறுதிக்குள் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படும். இதே போல் சைக்கிள்களும் வழங்கப்படும். இந்தியாவில் 80 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். தமிழக அளவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் உள்ளனர். இதை கருத்தில் கொண்டு பிளஸ்-2 புதிய பாடதிட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாடதிட்டத்தின்கீழ் கல்வி கற்பவர்கள், பிளஸ்-2 முடித்தவுடன் வேலைவாய்ப்பு பெறலாம்.

மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு போட்டி தேர்வுகளையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 3,019 மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதில் 1,472 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அடுத்த மாதம் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தொடங்கும். பிளஸ்-2 வணிகவியல் பாடப்பிரிவில் படித்து கொண்டிருக்கும் 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வை எழுத 500 ஆடிட்டர்கள் மூலம் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கோவிந்தராஜ், முன்னாள் எம்.பி.பெருமாள், மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கட்டப்பன், ராஜீவ்காந்தி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மூர்த்தி, ஆவின் தலைவர் தென்னரசு, முன்னாள் நகர்மன்ற தலைவர் தங்கமுத்து, மத்திய கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கேசவன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட உடற்கல்வி அலுவலர் வளர்மதி நன்றி கூறினார்.

Next Story