பரமத்திவேலூர் அருகே ராஜா வாய்க்கால் கரையில் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரம்


பரமத்திவேலூர் அருகே ராஜா வாய்க்கால் கரையில் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 27 Aug 2018 4:15 AM IST (Updated: 27 Aug 2018 3:47 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர் அருகே ராஜா வாய்க்கால் கரையில் உடைப்பை சரிசெய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பரமத்தி வேலூர்,

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து பாசனத்திற்காக ராஜா வாய்க்கால் பிரிக்கப்பட்டு ராஜா, கொமராபாளையம் வாய்க்கால்கள் மூலம் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து பல்வேறு கிளை வாய்க்கால்களும் பிரிந்து செல்கின்றன.

கிளை வாய்க்கால்கள் நன்செய் இடையாறில் இருந்து மோகனூர் அருகே உள்ள வடுகப்பட்டி வரை பாசன வசதி அளித்து வருகிறது.இந்த வாய்க்கால்கள் பாசனத்தை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, மஞ்சள், கோரை உள்ளிட்ட பயிர்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஜேடர்பாளையம் படுகை அணையில் இருந்து ராஜா வாய்க்காலில் ஆண்டுக்கு 15 நாட்கள் மட்டும் பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிக்காக தண்ணீர் நிறுத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த பல மாதங்களாக காவிரியில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதனால் ராஜா வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காவிரியும், ராஜா வாய்க்காலும் ஒன்றாக சென்றது.

இதனால் ராஜா வாய்க்கால் செல்லும் பகுதிகளான ஜேடர்பாளையம் படுகை அணை அருகிலும், அய்யம்பாளையம், குன்னத்தூர் ஆகிய 3 இடங் களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பாசனத்திற்காக ராஜா வாய்க்காலில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கடைமடைவரை செல்லாத நிலை ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித்துறையினர் உடைப்பை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக மணல் மூட்டைகளை கரைகளில் அடுக்கி கரைகளை சீரமைத்து முதல் கட்டமாக விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Story