வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - பொள்ளாச்சி ஜெயராமன்
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
பொள்ளாச்சி,
அ.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. கோவை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், உள்ளாட்சி துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார். மாநில அ.தி.மு.க. தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டப்பேரவை துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன், மகேந்திரன் எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:–
அ.தி.மு.க.விற்கு பல்வேறு காலகட்டங்களில் சோதனைகள் நடைபெற்ற போதிலும், மீண்டும் எழுந்துள்ளது. சிலநேரங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. என்றாலும் நிரந்தர தோல்வி கிடையாது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறுகையில், எனக்கு பிறகும் இந்த கட்சி 100 ஆண்டு காலம் இருக்கும். மக்களுக்காக பாடுபடும் என்றார். எங்களை நம்பி சொல்லவில்லை. உங்களை நம் பித்தான் அவர் கூறினார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆத்மா மனித தெய்வங்களாக இருந்து கட்சியை காத்து வருகின்றனர். மக்கள் துணையிருக்கும் வரை எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. இது ஏழைகளின் கட்சியாகும். அ.தி.மு.க.விலிருந்து ஒரு சிலர் பதவிக்காக வேறுகட்சிக்கு சென்றிருப்பார்கள். அவர்கள் தாயின் மடியில் இளைப்பார மீண்டும் வருவார்கள்.
வித்தை காட்டுபவர்களுக்கு கூட்டம் கூடும். அந்த கூட்டம் சில மணி நேரத்தில் கலைந்து விடும். உண்மையான தொண்டன் அ.தி.மு.க.வை விட்டு எங்கும் செல்ல மாட்டான். மு.க.ஸ்டாலின், அழகிரி இடையே சொத்துக்களை காப்பாற்றி கொள்வதற்காகத்தான் சண்டை போட்டுக்கொள்கின்றனர். மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதி இருக்கக்கூடாது என்று தி.மு.க. உள்பட பலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கருணாநிதி காலமான போது மெரினாவில் அடக்கம் செய்ய தி.மு.க.வினர் இடம் கேட்டனர். இடம் ஒதுக்க வழக்குகள் தடையாக உள்ளது என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனைதொடர்ந்து ஒரே இரவில் 5 வழக்குகள் திரும்ப பெறப்பட்டன. நேரம் பார்த்து வெற்றி கண்டவர் நமது முதல்–அமைச்சர் ஆவார். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:– பொள்ளாச்சி தொகுதிக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தென்னை விவசாயிகள் கூடுதல் லாபம் அடையும் வகையில் தென்னை நீராபானம் இறக்க அனுமதி வழங்கி உள்ளார். ஆனைமலை ஆறு, நல்லாறு பாசனத்திட்டம் நிறைவேற்ற ஓய்வு பெற்ற பொறியாளர்கள் தலைமையில் ஆய்வுக்குழு நியமித்து முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 10 வருடங்களாக கட்சியில் இல்லாதவர் டி.டி.வி. தினகரன். பாராளுமன்றத்திற்கே போகக்கூடாது என்று ஜெயலலிதாவால் விரட்டப்பட்டவர் தான் டி.டி.வி. தினகரன். இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை அ.தி.மு.க. பக்கம் தான் தொண்டர்கள் இருப்பார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் அ.தி.மு.க. தயவால் தான் ஆட்சி அமைக்க முடியும். மந்திரி சபையிலும் அ.தி.மு.க. இடம்பெறும்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு நகரம், பேரூராட்சி, ஊராட்சிகள் வார்டு வரை வாக்குச்சாவடி முகவர்கள் நியமிக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து செயலாற்ற வேண்டும். ஆட்சிக்கும், கட்சிக்கும் துரோகம் செய்பவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது அரசின் சாதனைகளை சொல்ல வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் அரசின் நலத்திட்டங்களை பெற்று பலன் அடைந்திருப்பார்கள். இவ்வாறு
அவர் பேசினார்.
கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கிணத்துக்கடவு கே.சண்முகம், வால்பாறை கஸ்தூரி வாசு, சூலூர் ஆர்.கனகராஜ், மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் வெங்கடாசலம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் விஜயகுமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரகுபதி, ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ஆர்.ஏ. சக்திவேல், தாமோதரன், துணைச்செயலாளர் வக்கீல் தனசேகரன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய முன்னாள் தலைவர் செல்வி பத்மினி, மாநில கோ–ஆப் டெக்ஸ் தலைவர் மனோகரன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நெகமம் சோமசுந்தரம், ராதா மணி, வதம்பச்சேரி கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ண குமார் வரவேற்றார். முடிவில் புறநகர் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் ஜேம்ஸ் ராஜா நன்றி கூறினார்.