கரூர்– கோவை இடையே படுக்கை வசதியுடன் புதிய சொகுசு பஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்


கரூர்– கோவை இடையே படுக்கை வசதியுடன் புதிய சொகுசு பஸ் சேவை அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 27 Aug 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

கரூர்– கோவை இடையே படுக்கை வசதியுடன் புதிய சொகுசு பஸ் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர்,

கரூரில் இருந்து கோவைக்கு குறைந்த நேரத்தில் செல்லும் வகையிலும், மருத்துவமனை– கல்லூரி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நின்று செல்லும் வகையிலும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இருக்கை, படுக்கை மற்றும் குளிர்சாதன வசதியுடன் சொகுசு அரசு பஸ் இயக்க திட்டமிடப்பட்டது. அந்த வகையில் நேற்று கரூரில் இருந்து கோவைக்கு செல்லக்கூடிய அந்த புதிய அரசு பஸ் சேவையை, கரூர் பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் முன்னிலை வகித்தார். இந்த பஸ்சானது தினமும் காலை 6 மணிக்கு கரூரில் இருந்து கோவைக்கும், பின்னர் கோவையில் இருந்து மாலை 5.30 மணிக்கு கரூருக்கும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


அதனை தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:–

கரூர்–கோவை இடையே இயக்கப்படும் இந்த சொகுசு பஸ்சில் 30 இருக்கை வசதி மற்றும் 15 படுக்கை வசதிகள் உள்ளது. இந்த பஸ்சானது சூலூர், ராயல்கேர் மருத்துவமனை, கே.எம்.சி.எச். மருத்துவமனை, ஜி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி, சி.ஐ.டி. கல்லூரி, ஹோப்ஸ் கல்லூரி, சிங்கா நல்லூர் பஸ் நிலையம், கிருஷ்ணம்மாள் கலைக்கல்லூரி, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக்கல்லூரி, குப்புசாமி நாயுடு மருத்துவமனை, கே.ஜி. மருத்துவமனை, காந்திபுரம் பஸ் நிலையம், அவினாசிலிங்கம் கல்லூரி, கங்கா மருத்துவமனை என மொத்தம் 7 கல்லூரிகள் மற்றும் 5 மருத்துவமனைகளில் நின்று செல்லும் வகையில் இயக்கப்படவுள்ளது.

குறைந்த தொலைவில், குறைந்த பயண நேரத்தில் சொகுசுப்பேருந்து என்ற வகையில் இந்த பஸ் சேவை இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து கரூருக்கு வரும்போது தென்னிலை, க.பரமத்தி, விசுவநாதபுரி, வடிவேல் நகர்மில்க்கேட், பைபாஸ் ரவுண்டானா ஆகிய இடங்களில் பயணிகள் இறங்கும் வகையில் இந்த பஸ் நின்று செல்லும். இந்த புதிய பஸ் சேவையானது பொதுமக்களுக்கும், மருத்துவமனை செல்லக்கூடிய நோயாளிகளுக்கும், கல்லூரி மாணவ– மாணவிகளுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


இந்த நிகழ்ச்சியின்போது, வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலக்கண்ணன் மற்றும் தமிழ்நாடு விரைவு போக்குவரத்துக்கழக மேலாளர் கேசவராஜ், கரூர் மண்டல பொதுமேலாளர் ராஜ்மோகன், துணைமேலாளர் ஜூலியஸ் அற்புதராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story