கூடலூரில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகள்


கூடலூரில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற பல மணி நேரம் காத்திருக்கும் நோயாளிகள்
x
தினத்தந்தி 28 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 12:25 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற நோயாளிகள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

கூடலூர்,

கூடலூர் தாலுகாவில் அரசு ஆஸ்பத்திரி மேல்கூடலூரில் இயங்கி வருகிறது. இங்கு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை, உள் மற்றும் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகள் உள்ளன. அரசு ஆஸ்பத்திரியின் கட்டுப்பாட்டின் கீழ் கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகில் அரசு மருந்தகம் செயல்பட்டு வந்தது. அங்கு ஒரு டாக்டர், நர்சுகள், மருந்தாளுநர்கள் பணியாற்றி வந்தனர்.

கூடலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் காய்ச்சல், தலைவலி, வயிற்று உபாதைகள் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தகத்துக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றனர். ஆனால் அந்த மருந்தக கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. அதனை சீரமைக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைக்கு பொதுநல அமைப்புகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கூடலூரில் கடந்த சில மாதங்களாக தொடர் மழை பெய்கிறது. இதையொட்டி அரசு மருந்தக கட்டிடத்தின் உள்ளே மழைநீர் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி அரசு மருந்தகம் மூடப்பட்டது. இதனால் கூடலூர் தாலுகா மக்கள் மேல்கூடலூரில் உள்ள தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்று வருகின்றனர். இதையொட்டி அங்கு நோயாளிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப கூடுதல் டாக்டர்களும் நியமிக்கப்படவில்லை. எனவே நோயாளிகள் பல மணிநேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்லும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக நடுவட்டம், பைக்காரா, டி.ஆர்.பஜார், மண்வயல், மசினகுடி, தொரப்பள்ளி, தேவர்சோலை பகுதியில் இருந்து காலையில் வரும் நோயாளிகள் மாலையில் தான் வீடு திரும்புகின்றனர்.

இதுகுறித்து ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நோயாளிகள் கூறியதாவது:–

கூடலூர் நகரில் செயல்பட்டு வந்த மருந்தகத்தை மூடியதால், தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வர வேண்டிய நிலை உள்ளது. காலை 8.30 மணிக்கு வந்தால் பல மணி நேரம் காத்திருந்து மாலையில் தான் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல முடிகிறது. இதற்கிடையே மதிய உணவு இடைவேளைக்கு டாக்டர்கள் சென்றுவிடுகின்றனர். அப்போது டாக்டர்கள் திரும்பி வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் கூட்டமும் அதிகரித்து விடுகிறது. எனவே கூடலூரில் மூடப்பட்ட அரசு மருந்தக கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story