குளத்தில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு


குளத்தில் மூழ்கிய தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 28 Aug 2018 3:30 AM IST (Updated: 28 Aug 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே, குளத்தில் மூழ்கிய தொழிலாளி நேற்று பிணமாக மீட்கப்பட்டார்.

பாவூர்சத்திரம், 


பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் வணிகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 40), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருடன் கீழப்பாவூருக்கு வடபுறம் உள்ள மேலப்பாவூர் குளத்தில் குளிக்கச் சென்றார். குற்றாலம், செங்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்ததால் தற்போது கால்வாயில் தண்ணீர் வந்து, குளம் நிரம்பி மறுகால் சென்று வருகிறது.

இந்தநிலையில் சுடலையும், மாரியப்பனும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சுடலை திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாரியப்பன் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுபற்றி அவரது உறவினர்கள் பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் ஆலங்குளம், சுரண்டை தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள், குளத்துக்கு வந்து சுடலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்களும் சென்று, ரப்பர் படகு மூலம் தேடினர். 2 நாட்களாக தேடியும் சுடலையை கண்டுபிடிக்க முடியவில்லை.
நேற்று காலையும் தேடும் பணி நடந்தது. அங்கு குளத்தின் வெகு தூரத்தில் செடி கொடிகளில் சுடலையின் உடல் சிக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மிகவும் போராடி சுடலையின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் பாவூர்சத்திரம் போலீசார் வந்து, சுடலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன சுடலைக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், மதன், முகேஷ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story