சம்பளம் வழங்கக்கோரி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்


சம்பளம் வழங்கக்கோரி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 28 Aug 2018 5:00 AM IST (Updated: 28 Aug 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் 32 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் அவர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையும் அமல்படுத்தப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட்டு தற்போது வீட்டு வாடகைப்படி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் நேற்று பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்த அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இயக்குனர் அலுவலக படிக்கட்டுகளில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் போராட்டம் நடத்திய ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு கல்வித்துறை இயக்குனர் குமார் அழைப்பு விடுத்தார். முக்கிய நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது முதல்கட்டமாக 4 மாத சம்பளத்தை ஓரிரு நாட்களில் தருவதாக இயக்குனர் குமார் உறுதியளித்தார். ஆனால் அவரது உறுதியை ஏற்காமல் மீண்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின் பிற்பகலில் மீண்டும் அவர்களுடன் இயக்குனர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 4 மாத சம்பளம் வழங்குவதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை ஒரு வாரத்துக்கு தள்ளிவைப்பதாகவும், அதற்குள் சம்பளம் கிடைக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் இறங்குவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story