குழந்தைகள் பாலியல் புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி: தேசிய ஆணைய உறுப்பினர் தகவல்
குழந்தைகள் பாலியல் புகார் தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி அமைக்கப்படும் என்று தேசிய ஆணைய உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவையில் உள்ள குழந்தைகள் காப்பகங்களை ஆய்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை தலைமை செயலகத்தில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் சமூக நலத்துறை செயலாளர் அலீஸ், மாவட்ட கலெக்டர் சவுத்ரி அபிஜித் விஜய், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குனர் யஷ்வந்தையா, குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதுவை மாநிலத்தில் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தொடர்பாகவும், அதனை தடுக்கவும் மாநில அரசு எடுத்து வரும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்தும், பாலியல் உள்ளிட்ட குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
மேலும் புதுவையில் உள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்களையும் உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை தயாரிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சிறிய மாநிலமான புதுச்சேரியில் 60 குழந்தைகள் காப்பகம் உள்ளது. அதில் 28 காப்பகங்கள் அரசு உதவி பெற்று செயல்பட்டு வருகின்றன. இன்னும் 15 நாட்களுக்குள் மாவட்ட கலெக்டரும், மாநில குழந்தைகள் நல ஆணையமும் ஒவ்வொரு காப்பகமாக சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். புதுவையில் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்படக் கூடாது. இதற்காக நானும் முன்னறிவிப்பு இல்லாமல் சில குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.
புதுவை மாநிலத்தில் குழந்தைகள் உரிமை மீறல் தொடர்பாக கடந்த ஆண்டில் 428 புகார் உள்ளது. கடந்த 3 மாதத்தில் போக்சோ பிரிவின் கீழ் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள காப்பகங்களின் செயல்பாடு திருப்திகரமாகத்தான் உள்ளது. மேலும், குழந்தைகள் புகார் அளிக்க போக்சோ புகார் பெட்டி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்படும். புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.