மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை
தர்மபுரி மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி,
தமிழகத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநிலம் முழுவதும் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து செல்லும் பயணிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை ஐகோர்ட்டு, காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்திருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை பின்பற்றி தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்து வருபவர்கள் ஹெல்மெட் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் அவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் தர்மபுரி நகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தலைமையில் போக்குவரத்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சேகர், போலீஸ் ஏட்டு மீனா மற்றும் போலீசார், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். இனிவரும் காலங்களில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று அப்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.