விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி கலெக்டரிடம் மனு


விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 28 Aug 2018 4:38 AM IST (Updated: 28 Aug 2018 5:41 AM IST)
t-max-icont-min-icon

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி விநாயகர் சிலையுடன் வந்து கலெக்டரிடம் இந்து முன்னணியினர் மனு அளித்தனர்.

திண்டுக்கல், 


நாடு முழுவதும் வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் மனு அளிக்க இந்து முன்னணியினர் முடிவு செய்திருந்தனர்.

அதன்படி, நேற்று திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மாநில செயலாளர் முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ், பொதுச்செயலாளர் சங்கர்கணேஷ் ஆகியோர் தலைமையில் பல்வேறு இடங்களில் இருந்து தனித்தனியாக மனு அளிப்பதற்காக இந்து முன்னணியினர் வந்தனர். கையில் விநாயகர் சிலையுடன் வந்த அவர்களை, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பாகவே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனு அளிக்க அவர்களை அனுப்பி வைத்தனர். அதன்படி, விநாயகர் சிலையுடன் சென்று தனித்தனியாக கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.

இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது:-

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வருவாய்த்துறை, மின்வாரியம், தீயணைப்பு துறை உள்பட 6 துறைகளிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை முடக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். அவர், அரசுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக, மனு அளிக்க வந்த இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் அங்கப்பிரதட்சணம் செய்வது போல உருண்டு கொண்டே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story