முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் நல்லது தங்கதமிழ்செல்வன் பேட்டி


முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் நல்லது தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 28 Aug 2018 4:46 AM IST (Updated: 28 Aug 2018 4:46 AM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டில் ஊழல் வழக்கு விசாரணை நடந்து வருவதால் முதல்-அமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தால் நல்லது என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

திண்டுக்கல், 


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் சவேரியார்பாளையத்தில் இருந்து தொண்டர்கள் சென்ற ஒரு மினிவேன் எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த மாரியம்மாள், ரெமிளா உள்பட 7 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவது என்றாலே போலீசார் அனுமதி மறுக்கின்றனர். ஒவ்வொரு கூட்டத்துக்கும் கோர்ட்டுக்கு சென்றே அனுமதி பெற வேண்டி உள்ளது. எங்கள் கட்சி கூட்டங்களுக்கு சேரும் மக்கள் கூட்டத்தை பார்த்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் மிரண்டு போய் உள்ளனர்.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தின்போது, கட்சி பணிக்காக தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியது நல்ல கருத்து தான். பதவி சுகம் இருக்கும் வரை அவரும், எடப்பாடி பழனிசாமியும் பிரிய வாய்ப்பு இல்லை. நெடுஞ்சாலைத்துறை பணிகளில் ரூ.1,500 கோடி ஊழல் நடந்துள்ளதாக கடந்த 6 மாதத்துக்கு முன்பே நாங்கள் குற்றம் சாட்டினோம்.
தற்போது தான் தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு கட்சிகள் புகார் அளிக்கின்றன. அந்த ஊழல் தொடர்பாக முதல்-அமைச்சர் மீது தி.மு.க. தொடர்ந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. கோர்ட்டு என்ன தீர்ப்பு அளிக்கிறது என்பதை பார்ப்போம். அதற்கு முன்பே தார்மீக அடிப்படையில் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பதவியை ராஜினாமா செய்தால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story