சாலை வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலெக்டரிடம் மனு: தரையில் அமர்ந்து கோஷமிட்டதால் பரபரப்பு
சாலை வசதி கேட்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். இதனையடுத்து அவர்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
இதில் வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பு என பல்வேறு கோரிக்கைகள் வைத்து சுமார் 600-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும் முன்பு அளிக்கப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணை குறித்தும் அவர் கேட்டறிந்தார். போலீசார் கூட்டத்திற்கு வந்த மக்களை தீவிர சோதனைக்கு பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
கூட்டத்தில் செங்கம் தாலுகா அரியாகுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். மேலும் எங்கள் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். எங்கள் கிராமத்து மக்கள் பள்ளி கூடத்திற்கும், மருத்துவமனைக்கும் அரட்டவாடிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே, மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரியாகுஞ்சூர் கிராமத்தில் இருந்து சின்னக் கல்தாம்பாடி வரை காட்டு வழி பாதையில் சாலை வசதி அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முன்னதாக மனு அளிக்க வந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தரையில் இருந்து எழுந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி தாலுகா சம்புவராயநல்லூர் கிராமம் கொட்டாமேடு பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் ஊருக்கும், சம்புவராயநல்லூருக்கும் இடையே ரெயில்வே வழி உள்ளது. இதில் ஆள் இல்லாத ரெயில்வே கேட் உள்ளது. நாங்கள் வெளியே சென்று வர இந்த ஒரு வழி மட்டுமே உள்ளது. மேற்கு மற்றும் வடக்கு கமடலநாகநதியும், தெற்கே காமக்கூர் ஏரிக்கால்வாயும், கிழக்கே ரெயில்வே பாதையும் அமைந்து உள்ளது.
அதனால் எங்கள் பகுதிக்கு செல்ல வேறு வழி ஏதுமில்லை. எங்கள் பகுதியில் நெல், கடலை, கரும்பு போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகிறோம். சுமார் 100 விவசாய குடும்பங்கள் 500 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது இந்த ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை சுரங்கபாதையாக மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.
சுரங்க பாதை அமைந்தால் நாங்கள் விவசாய பொருட்களை வெளியில் கொண்டு செல்ல முடியாது. மேலும் கரும்பு லோடு லாரியும், நெல் அறுவடை எந்திரமும் செல்ல முடியாது. எனவே, இந்த சுரங்கபாதையில் நெல் அறுவடை எந்திரம் செல்லும் வகையில் சுரங்க பாதையை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Related Tags :
Next Story