குடியாத்தம் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து, பொருட்கள் எரிந்து நாசம்
குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
குடியாத்தம்,
குடியாத்தத்தில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மருந்து தோய்த்த தீக்குச்சிகள் மற்றும் காலி தீப்பெட்டிகளை தனித்தனியாக வெளியில் கொடுத்து, தீப்பெட்டிகளுக்குள் குச்சிகளை நிரப்பும் ஜாப்ஒர்க் செய்யும் பணி பல இடங்களில் நடைபெற்று வருகிறது.
குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து குடியாத்தம் காளியம்மன்பட்டி பகுதியில் உள்ள ஜாப்ஒர்க் செய்யும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு தீக்குச்சி மற்றும் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டு, வேலை நடைபெற்று வந்தது. இந்த பணியில் ஆண்கள், பெண்கள் என 25 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று மாலையில் மருந்து தோய்த்த தீக்குச்சிகள் இருந்த மூட்டையை தொழிலாளர்கள் எடுத்து வைத்து கொண்டிருந்தபோது, உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி உள்ளது. இந்த தீ மளமளவென அருகில் இருந்த மற்ற மூட்டைகளுக்கும், தீப்பெட்டிகளுக்கும் பரவியது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்கள் வெளியே வந்து விட்டனர். தீ வேகமாக பரவியதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டி பொருட்கள் எரிந்து நாசமாயின. மேலும் இதுதொடர்பாக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு, இன்ஸ்பெக்டர் இருதயராஜ், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாச்சலம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த தீ விபத்தின்போது பணியாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி அனைவரும் தப்பினர்.
Related Tags :
Next Story