மின்னல் தாக்கி சேதம் அடைந்த தஞ்சை பெரியகோவில் கேரளாந்தகன் கோபுர சிற்பம் சீரமைப்பு


மின்னல் தாக்கி சேதம் அடைந்த தஞ்சை பெரியகோவில் கேரளாந்தகன் கோபுர சிற்பம் சீரமைப்பு
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 28 Aug 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

மின்னல் தாக்கி சேதம் அடைந்த தஞ்சை பெரியகோவில் கேரளாந்தகன் கோபுர சிற்பம் சீரமைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து தமிழினத்தின் பெருமைமிகு அடையாளமாக உயர்ந்து இருக்கிறது. தனித்துவமான கட்டிட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலின் முகப்பில் கேரளாந்தகன் கோபுரமும், அடுத்ததாக ராஜராஜன் கோபுரமும் உள்ளது.

பெருவுடையார் சன்னதிக்கு மேல் பகுதியில் 216 அடி உயர கோபுரம், 13 தளங்களுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. தஞ்சை பெரிய கோவிலின் முகப்பில் உள்ள கேரளாந்தகன் கோபுரத்தின் முதல் தளம் தவிர மற்றவை சிறப்பான தொழில்நுட்பத்தினால் தயாரிக்கப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை. கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிமாநில, வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.


கடந்த ஜூன் மாதம் 5–ந் தேதி தஞ்சையில் இடி–மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கியது. இதனால் கோபுரத்தின் உச்சியில் உள்ள கீர்த்தி முகத்தில் இருக்கும் சிற்பம் உடைந்து அரை அடி நீளத்துக்கு சேதம் அடைந்தது. இந்த சேதம் குறித்து மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இவற்றை பழமைமாறாமல் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. கேரளாந்தகன் கோபுரத்தில் மின்னல் தாக்கி சேதம் அடைந்த சிற்பம், அப்படியே பழமைமாறாமல் சீரமைக்கப்பட்டு வருகிறது.

எதிர்புறத்தில் எவ்வளவு நீளம், அகலத்தில் இதேபோன்ற சிற்பம் உள்ளதோ, அவற்றை அளவீடு செய்து அப்படியே சேதம் அடைந்த பகுதியில் சீரமைக்கப்படுகிறது. மேலும் பெரியகோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்துவதற்கு ஏதுவாக கோபுரங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கேரளாந்தகன் கோபுரத்தில் இரும்பு கம்பிகளை கொண்டு சாரம் அமைக்கப்பட்டு, கோபுரங்களில் தண்ணீர் ஊற்றி பணியாளர்கள் தூய்மை செய்தனர்.

பின்னர் இலகுவான ரசாயனம் மூலம் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரசாயனத்தினால் கோபுரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், சிற்பம் சீரமைக்கும் பணி இன்றைக்குள் முடிவடைந்துவிடும் என்றும் தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story