சாலை அமைக்கக்கோரி 1,000 கடைகள் அடைப்பு: வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


சாலை அமைக்கக்கோரி 1,000 கடைகள் அடைப்பு: வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Aug 2018 4:30 AM IST (Updated: 29 Aug 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சூரம்பட்டியில் சாலை அமைக்கக்கோரி 1,000 கடைகள் அடைக்கப்பட்டன. வியாபாரிகள் தங்களது முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து சூரம்பட்டிவலசு வரை பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த பிறகு அங்கு புதிய சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகனங்கள் சென்றபோது புழுதி பறந்தது. சாலையோரமாக உள்ள கடைகள், வீடுகள் முன்பு புழுதி படிந்து காணப்படுகிறது. எனவே சாலை அமைக்க வேண்டும் என்று பல மாதங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சூரம்பட்டி வலசுரோடு பகுதியில் கடை வைத்து உள்ள வியாபாரிகள் ஒன்றுதிரண்டு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மண், ஜல்லி கற்களை கொண்டு சாலை அமைக்கப்பட்டது. ஆனால் அங்கு தார் சாலை அமைக்கப்படவில்லை. புழுதி பறப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் 28-ந் தேதி (நேற்று) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று முன்தினம் வியாபாரிகள், கடையடைப்பு போராட்டம் குறித்த நோட்டீசு அடித்து அந்த பகுதியில் வினியோகம் செய்தனர். மேலும், பஸ்கள், ஆட்டோக்களில் நோட்டீசு ஒட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, அவர்களை வியாபாரிகள் முற்றுகையிட்டு உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் கூறுகையில், சூரம்பட்டி பகுதியில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒப்பந்தம் விட்ட பிறகு சாலை அமைக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத வியாபாரிகள் திட்டமிட்டப்படி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

அதன்படி சூரம்பட்டி நால்ரோடு முதல் சூரம்பட்டிவலசு வரை உள்ள 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. இதில் ஓட்டல்கள், பேக்கரிகள், மளிகைக்கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ஒருசில டீக்கடைகளும், மருந்து கடைகளும் மட்டும் திறந்து இருந்தன.

மேலும், வியாபாரிகள் சூரம்பட்டிவலசு ரோட்டில் திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தார் சாலையை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மேலும், முகத்தில் துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அங்கு சூரம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story