மயிலாடுதுறை ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி பாதங்கள், ஜடாரி திருட்டு


மயிலாடுதுறை ஆஞ்சநேயர் கோவிலில் வெள்ளி பாதங்கள், ஜடாரி திருட்டு
x
தினத்தந்தி 29 Aug 2018 3:45 AM IST (Updated: 29 Aug 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமரா வயர் இணைப்பை துண்டித்து மர்மநபர்கள் வெள்ளிபாதங்கள், ஜடாரி ஆகியவற்றை திருடி சென்றுவிட்டனர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை ரெயிலடியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்றுமுன்தினம் பட்டாச்சாரியார் இரவு கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை கோவிலை திறக்க வந்தபோது, கோவில் கருவறை முன்பு உள்ள இரும்பு கம்பியிலான கதவு பூட்டுக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டிருந்த ½ கிலோ எடை உள்ள வெள்ளி பாதங்கள், ஜடாரி ஆகிய பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

கோவிலை சுற்றிப்பார்த்த போது மர்மநபர்கள் கோவிலின் முன்புறம் உள்ள மதில்கள் வழியாக இறங்கி இருப்பதும், தெரியவந்ததும், மேலும் அவர்கள் கோவிலுக்குள் வந்து கதவு பூட்டை உடைத்த போது அங்கிருந்த அலாரம் மணி அடித்ததால் உடனே அலாரம் மணி மின்இணைப்பை துண்டித்துவிட்டு, அதை தண்ணீர் உள்ள தொட்டியில் போட்டு மூழ்கடித்ததும் தெரியவந்தது.

மேலும் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் வயர் இணைப்பு அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தது. கோவிலின் பின்புறம் உள்ள சுவர் மேல் பொருத்தப்பட்டிருந்த கம்பிகளை ஆள் நுழையும் அளவுக்கு வளைத்து திருடிய பொருட்களை கயிறு கட்டி அதன் வழியாக எடுத்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் டெல்லிபாபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story