சேலத்தில், வீட்டு பத்திரம் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டுவசதி வாரிய அலுவலர் கைது


சேலத்தில், வீட்டு பத்திரம் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டுவசதி வாரிய அலுவலர் கைது
x
தினத்தந்தி 29 Aug 2018 4:45 AM IST (Updated: 29 Aug 2018 12:42 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் வீட்டு பத்திரம் வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அலுவலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சேலம்,

சேலம் அன்னதானப்பட்டியில் சேலம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சார்பில் குடியிருப்புகள் கட்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் கடந்த 1995-ம் ஆண்டு பெரமனூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (வயது 67) என்பவர் ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் கொடுத்து வீடு ஒன்றை வாங்கினார். இவர் சேலத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்தணிக்கை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இதனிடையே வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு நிலம் கொடுத்தவர் திடீரென, நிலத்திற்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கூடுதல் தொகை வழங்க வீட்டு வசதி வாரியத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து வீட்டு வசதி வாரிய அதிகாரிகள், குடியிருப்பில் வீடு வாங்கிய நபர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட கூடுதல் தொகை வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து துரைசாமி, வீட்டிற்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் வழங்க வேண்டும் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகளால் தொகை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த தொகையை அவர் படிப்படியாக சமீபத்தில் தான் கட்டி முடித்தார். துரைசாமி வீட்டிற்கான பத்திரம் வாங்குவதற்காக அஸ்தம்பட்டி அருகே அய்யந்திருமாளிகையில் உள்ள சேலம் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்பு கொண்டார்.

அப்போது அங்கு பணியில் இருந்த, வீடு ஒதுக்கீடு இருக்கை அலுவலர் தனசேகரன் என்பவர் துரைசாமியிடம் வீட்டு பத்திரம் வழங்க வேண்டும் என்றால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதைக்கேட்ட துரைசாமி, தன்னால் பணம் கொடுக்க முடியாது என்றார். ஆனால் பணம் கொடுத்தால்தான் வீட்டு பத்திரம் வழங்குவேன் என துரைசாமியிடம், வீடு ஒதுக்கீடு இருக்கை அலுவலர் தனசேகரன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத துரைசாமி இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலியிடம் புகார் அளித்தார். பின்னர் அவரின் அறிவுரையின் பேரில் நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை துரைசாமி தனசேகரனிடம் வழங்க அவரது அலுவலகத்திற்கு சென்றார். உடனே அவரை அலுவலகம் அருகே உள்ள ஜெராக்ஸ் கடைக்கு தனசேகரன் அழைத்து சென்றார். அதே நேரத்தில் அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு போலீசார் சுதாரித்து கொண்டு, பின் தொடர்ந்து சென்று ஜெராக்ஸ் கடைக்கு சென்றனர். அங்கு துரைசாமியிடம் இருந்து தனசேகரன் லஞ்ச பணம் வாங்கியபோது அவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து தனசேகரனை அவரது அலுவலகத்திற்கு அழைத்து சென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். பின்னர் தனசேகரன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். பணம் மற்றும் ஆவணங்களையும் கைப்பற்றினர். தொடர்ந்து தனசேகரனை சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்படுவார் என லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரமவுலி தெரிவித்தார்.

சேலத்தில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வீட்டு வசதி வாரிய அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story