ரூ.1½ கோடி மோசடி செய்துவிட்டு தற்கொலை: கள்ளக்காதல் ஜோடி குழந்தைகளுடன் பேசியது வாட்ஸ்-அப்பில் பரவுகிறது


ரூ.1½ கோடி மோசடி செய்துவிட்டு தற்கொலை: கள்ளக்காதல் ஜோடி குழந்தைகளுடன் பேசியது வாட்ஸ்-அப்பில் பரவுகிறது
x
தினத்தந்தி 29 Aug 2018 4:00 AM IST (Updated: 29 Aug 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1½ கோடி மோசடி செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி, குழந்தைகளுடன் பேசிய உரையாடல் வாட்ஸ்- அப்பில் பரவுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 48), பழைய நகைகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய அக்காள் மகள் சிவசெல்வி. இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராஜ்குமாருக்கும், சிவசெல்விக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 2 பேரும் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மருங்கூர் பகுதிக்கு வந்து வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். அப்போது வங்கிகளில் ஏலத்துக்கு வரும் பழைய நகைகளை வாங்கி விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ஏராளமானோரிடம் பணம் வாங்கினர்.

அரசியல் கட்சியினர் மற்றும் தொழில் அதிபர்களும் கூட லட்சக்கணக்கில் பணம் கொடுத்தனர். இப்படியாக ஏராளமானவர்களிடம் ரூ.1½ கோடி வரை மோசடி செய்து விட்டு இருவரும் தலைமறைவாயினர். இதையடுத்து பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் ராஜ்குமாரையும், சிவசெல்வியையும் போலீசார் தேடி வந்தனர். 2 பேரும் மராட்டியம் மாநிலம் நாக்பூருக்கு ரெயிலில் சென்றனர். அங்கு போலீசார் கைது செய்ய முயன்ற போது ரெயிலிலேயே ராஜ்குமாரும், சிவசெல்வியும் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டனர். இதற்கிடையே தற்கொலை செய்து கொண்ட சிவசெல்வி, அதற்கு முன்பாக தனது குழந்தைகளிடம் செல்போனில் பேசிய உரையாடல் வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது.

அந்த உரையாடல் 7 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் ராஜ்குமாரும் பேசுகிறார். அடிக்கடி போன் செய்யாதீர்கள் என்றும், அவ்வாறு செய்தால் செல்போனை எண்ணை வைத்து போலீசார் எங்களை கண்டுபிடித்து விடுவார்கள் என்று குழந்தைகளிடம் கூறுகிறார். பின்னர் பேசிய ஒரு குழந்தை தனக்கு மிகவும் பசிக்கிறது என்று சோகத்துடன் கூறுகிறது.

இந்த உரையாடல் கடந்த சில தினங்களாக வாட்ஸ்-அப்பில் வைரலாக பரவி வருகிறது. இந்த உரையாடலை போலீசார் கைப்பற்றினர். உரையாடலை வாட்ஸ்-அப்பில் பரவச் செய்தது யார்? என்ற விவரம் தெரியவில்லை.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். ரூ.1½ கோடி மோசடியில் தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி குழந்தைகளுடன் பேசியது, வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருவதால் குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story