பிளஸ்–1 மாணவியை கர்ப்பமாக்கிய பிரிண்டிங் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை


பிளஸ்–1 மாணவியை கர்ப்பமாக்கிய பிரிண்டிங் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 29 Aug 2018 4:15 AM IST (Updated: 29 Aug 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் பிளஸ்–1 மாணவியை கர்ப்பமாக்கிய பிரிண்டிங் நிறுவன உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருப்பூர்,

தஞ்சை மாவட்டம் திருமலை சமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜாங்கம் (வயது 33). இவர் திருப்பூரை அடுத்த வீரபாண்டி பலவஞ்சிப்பாளையம் பகுதியில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்து பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது அந்த பிரிண்டிங் நிறுவனத்திற்கு அந்த பகுதியை சேர்ந்த பிளஸ்–1 படிக்கும் 16 வயது மாணவி அடிக்கடி வந்துள்ளார். அப்போது அந்த மாணவியிடம், ராஜாங்கம் ஆசை வார்த்தை அவரிடம் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய பெற்றோர் அந்த மாணவியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாணவியிடம் அவருடைய பெற்றோர் விசாரித்தபோது அந்த பகுதியில் பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வந்த அதன் உரிமையாளர் ராஜாங்கம், மாணவியிடம் ஆசை வார்த்தைகூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

இதையடுத்து மாணவியின் பெற்றோர் 2015–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15–ந் தேதி திருப்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாங்கத்தை கைது செய்தனர்.

இதையடுத்து திருப்பூர் மகிளா கோர்ட்டில் ராஜாங்கம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து விட்ட நிலையில் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட ராஜாங்கத்திற்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாங்கத்தை போலீசார் கோவை சிறையில் அடைத்தனர்.


Next Story