பாம்பனில் மீன்கள் விலை வீழ்ச்சி மழை பாதிப்பால் கேரள வியாபாரிகள் வராத நிலை
மழை வெள்ள பாதிப்பால் கேரளா வியாபாரிகள் வராததால் பாம்பனில் மீன்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்வதற்காக பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று முன்தினம் 100 விசைப்படகுகளில் 500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் அனைவரும் நேற்று காலை பல வகை மீன்களுடன் பாம்பன் கரை திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மாவுலா, பாறை, நகரை, சீலா, கிளி மீன் உள்ளிட்ட பல வகை மீன்களை கூடைகளில் வைத்திருந்தனர்.
கேரள வியாபாரிகள் யாரும் வராததால் அனைத்து மீன்களுமே உள்ளூர் வியாபாரிகளால் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததுடன் நஷ்டம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதுபற்றி மீனவர்கள் பேட்ரிக், சகாயம் ஆகியோர் கூறியதாவது, கேரளாவில் மழை வெள்ள பாதிப்பு காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே அங்குள்ள வியாபாரிகள் யாரும் மீன்களை வாங்க வரவில்லை. இதனால் அனைத்து மீன்களின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதிகமான நஷ்டமும் ஏற்பட்டுள்ளது. நகரை மீன் 1 கிலோ ரூ.120–க்கு விற்கப்படும். ஆனால் ரூ.80–க்கு தான் விலை போனது. கணவாய் ரூ.350–க்கு விற்கப்படும். ஆனால் ரூ.250–க்கு விற்கப்பட்டது. சீலா மீன் ரூ.600 வரை போகும். ஆனால் பாதியாக குறைந்து ரூ. 300–க்கு விலை போனது. இதேபோல் பாறை ரூ.200, சிகப்பு கிளாத்தி ரூ.125, மாவுலா ரூ.200, விளை மீன் ரூ. 220 என மீன்களின் விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் சில மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கடலில் கொட்டினர்.
ஒரு படகிற்கு 80 ஆயிரம் வரையிலும் செலவு செய்து கடலுக்கு சென்று வந்தும் மீன்களை கொள்முதல் செய்ய கேரள பகுதியில் இருந்து யாரும் வராததால் மீனவர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றனர்.