தண்ணீர் பற்றாக்குறை: ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட ஆக்கி மைதானம் வீணாகும் அவலம்


தண்ணீர் பற்றாக்குறை: ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட ஆக்கி மைதானம் வீணாகும் அவலம்
x
தினத்தந்தி 30 Aug 2018 3:30 AM IST (Updated: 29 Aug 2018 9:57 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் பற்றாக்குறையால் ராமநாதபுரத்தில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ஆக்கி விளையாட்டு மைதானம் வீணாகி வருகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ரூ.6 கோடியில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஆக்கி விளையாட்டு மைதானம் உள்ளது. கடந்த 2016–ம் ஆண்டு இந்த விளையாட்டு மைதானம் திறந்து வைக்கப்பட்டது. இதன்பின்னர் இங்கு இந்திய ஆக்கி சங்கம் மூலம் அனைத்திந்திய சப்–ஜூனியர் ஆக்கி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 30 மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதுதவிர மாநில அளவிலான 16 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. ஆக்கி கழகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த மைதானத்தினை பின்னர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தி தனது பராமரிப்பின்கீழ் கொண்டு வந்தது.

முறையான பராமரிப்பின்மை காரணமாக பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் தற்போது வறண்ட நிலையில் காணப்படுகிறது. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தால்தான் 5 ஆண்டுகளுக்கு இந்த மைதானத்தின் தன்மை குறையாமல் பாதுகாக்க முடியும் என்ற நிலையில் தற்போது தண்ணீர் பாய்ச்சுவதே அரிதாகி வருகிறது. இங்குள்ள கிணறுகள் வறண்டுவிட்டதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகள் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இதற்கு விளையாட்டு குழு கூட்டம் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதுதவிர போட்டிகள் நடத்துவதற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 கட்டணம் நிர்ணயித்துள்ளது பின்தங்கிய ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு பெரும் சுமையாக மாறிவிட்டது. பெரும்பொருட்செலவில் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட ஆக்கி விளையாட்டு மைதானம் தற்போது காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. ரூ.6 கோடி மதிப்பிலான ஆக்கி மைதானம் வீணாகி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் ஆக்கி சங்க செயலாளர் செல்லத்துரை கூறியதாவது:–

ஆக்கி மைதானத்தை மீண்டும் எங்களின் பராமரிப்பு வசம் ஒப்படைத்தால் சொந்த செலவில் தண்ணீர் வாங்கி காலை, மாலை வேளைகளில் பாய்ச்சி அடித்து பராமரிக்க தயாராக உள்ளோம். சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு கூறினார்.

இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் பிராங்க்பால் ஜெயசீலனிடம் கேட்டபோது, கிணறுகளை தூர்வாரி சீரமைக்கவும், புதிய கிணறு அமைக்கவும் நிதி உள்ளது. பணிகள் விரைவில் தொடங்கப்படும். தண்ணீர் ஊறியதும் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. விளையாடுவதற்கு கட்டணம் வசூலிக்கவில்லை. போட்டிகள் நடத்த அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது என்றார்.


Next Story