தென்மேற்கு பருவமழை காரணமாக ஊட்டியில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்


தென்மேற்கு பருவமழை காரணமாக ஊட்டியில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:15 AM IST (Updated: 30 Aug 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழை காரணமாக ஊட்டியில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீலகிரியில் தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்து உள்ளது. மழை தீவிரமாக பெய்ததால் முக்கிய அணைகளான அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, முக்குருத்தி, கெத்தை, மரவகண்டி, காமராஜ் சாகர், கிளன்மார்கன் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடுவென உயர்ந்தது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து மழை குறைந்ததால் சில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் ஊட்டியில் தங்கி இருந்து கண்டு களிக்கும் வகையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன. ஊட்டி நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் குடிநீர் தேவையை பல்வேறு அணைகள் பூர்த்தி செய்கின்றது.

ஊட்டி நகராட்சியில் பார்சன்ஸ்வேலி அணை, டைகர்ஹில் அணை, தொட்டபெட்டா அப்பர் அணை, கோடப்பமந்து அப்பர் அணை, மார்லிமந்து அணை உள்ளிட்ட அணைகள் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு ஊட்டியில் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்ததால், அணைகளின் நீர்மட்டம் மிகவும் குறைந்து காணப்பட்டது. அப்போது சில அணைகள் குட்டை போல் காட்சி அளித்தன. அணைகளில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருந்தது. இந்த ஆண்டு ஊட்டியில் தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டை விட அதிகளவில் பெய்து உள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. வனப்பகுதிகளில் உற்பத்தியாகி பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் அணைகளில் கலந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் 44 அடியாகவும், டைகர்ஹில் அணையின் நீர்மட்டம் 27.5 அடியாகவும் உயர்ந்து உள்ளது. மார்லிமந்து அணையின் முழு கொள்ளளவான 23 அடியில் தற்போது 17.5 அடிக்கு தண்ணீர் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு மார்லிமந்து அணையின் நீர்மட்டம் அதிகரித்து உள்ளதால், கடல்போல் காட்சி அளித்து வருகிறது. தொட்டபெட்டா லோயர், கோடப்பமந்து அப்பர் ஆகிய 2 அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. ஊட்டி நகராட்சி அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து போதிய அளவு தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Related Tags :
Next Story