புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்காததால் ரேஷன் கடையில் உட்கார்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள்


புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்காததால் ரேஷன் கடையில் உட்கார்ந்து படிக்கும் மாணவ, மாணவிகள்
x
தினத்தந்தி 29 Aug 2018 10:30 PM GMT (Updated: 29 Aug 2018 8:22 PM GMT)

புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறக்காததால் ரேஷன் கடையில் உட்கார்ந்து மாணவ, மாணவிகள் பாடம் படிக்கிறார்கள். இதனால் மாணவ, மாணவிகள் கடும் அவதிப்படுகிறார்கள்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் ஊராட்சியில் உள்ளது தொளுவபெட்டா கிராமம். மலைவாழ் மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டிடம் பழுதடைந்தது. இதனால் இங்கு படித்த 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தொளுவபெட்டாவில் உள்ள ரேஷன்கடையில் உட்கார வைக்கப்பட்டு பாடம் படித்து வருகிறார்கள்.

ரேஷன் கடை இயங்கும்போது, அங்கன்வாடி மையமும் இயங்குகிறது. அங்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள், சாக்கு மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் அவதிப்படுகிறார்கள். போதிய காற்றோட்டம் இல்லாமல் வேதனைப்படுகிறார்கள். இதன்மூலம் இருமல், சளி உள்ளிட்டவையால் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2016-ம் ஆண்டு இந்த அங்கன்வாடி மையத்துக்கு ரூ.8 லட்சம் செலவில் புதிய கட்டிடம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் திறப்பு விழா நடைபெறவில்லை. புதிய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை.

எனவே புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அதில் மாணவ, மாணவிகளை உட்கார வைக்கப்பட்டு பாடம் நடத்த வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story