ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் ராஜதானி ஊராட்சியில் ஜக்கம்மாள்பட்டி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு 500–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த சில மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தண்ணீருக்காக தோட்டங்களுக்கு அலையும் சூழல் ஏற்பட்டது. மேலும் தண்ணீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தங்களுக்கு முறையாக தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கோரி கிராம மக்கள் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பேச்சுவார்த்தையில் சமரச முயற்சி ஏற்படவில்லை.
அதிகாரிகளின் பதிலை ஏற்றுக்கொள்ளாத, பொதுமக்கள் தேனி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் செய்யக்கூடாது என்று கூறி கிராம மக்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை.
இதனால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமானதை தொடர்ந்து மறியிலில் ஈடுபட்ட 10–க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வாகனத்தில் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதன்பின்னர் மக்களை அப்புறப்படுத்திவிட்டு போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து உடனடியாக தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றவர்களும் விடுவிக்கப்பட்டனர். பொதுமக்களின் இந்த மறியல் போராட்டத்தினால் தேனி–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.