திருச்சியில் போலி நாட்டுக்கோழி முட்டை விற்பனை படுஜோர்


திருச்சியில் போலி நாட்டுக்கோழி முட்டை விற்பனை படுஜோர்
x
தினத்தந்தி 30 Aug 2018 4:15 AM IST (Updated: 30 Aug 2018 2:40 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பல இடங்களில் போலி நாட்டுக்கோழி முட்டை விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.

கே.கே.நகர்,

வாத்துமுட்டை, கோழி முட்டை இருந்தாலும், அதில் நாட்டுக்கோழி முட்டையில் தான் பல்வேறு சத்துக்கள் அடங்கி இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். உடலில் சத்து குறைபாடு உடையவர்கள் தினமும் ஒரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு போதிய சத்துக்கள் கிடைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அந்த காலத்தில் வீடு என்று இருந்தால் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வந்தோம். அப்போது நாட்டுக்கோழி முட்டைகள் எளிதில் கிடைத்து வந்தன. ஆனால் இப்போது வீடுகளில் கோழி வளர்ப்பை நாம் மறந்து விட்டதால் இன்று நாட்டுக்கோழி முட்டையும் நமக்கு கிடைப்பதில்லை. இதனால் நாட்டுக்கோழி முட்டை என்ற போர்வையில் இப்போது சாதாரண கோழி முட்டைக்கு கலர் கொடுத்து நாட்டுக்கோழி முட்டை என விற்பனை செய்து வருகிறார்கள்.

திருச்சியில் உள்ள உழவர்சந்தைகள், பொன்மலை சந்தை, விமான நிலையம் அருகே உள்ள சந்தை மற்றும் அதிக மக்கள் கூடும் இடங்களில் இந்த வியாபாரம் படுஜோராக நடந்து வருகிறது. இந்த வியாபாரத்தில் உள்ளவர்கள் சேலம், நாமக்கல்லில் சாதாரண கோழி முட்டைகளில் சிறிய அளவிலான முட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதில் சாயம் ஏற்றி அதனை நாட்டுக்கோழி முட்டை என விற்கிறார்கள். இந்த முட்டைகள் ரூ.7 மற்றும் 8 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு முட்டை விற்றாலே 5 ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் கடைகளில் சாதாரண முட்டை விற்பவர்களுக்கு ஒரு முட்டை விற்றால் 50 பைசா தான் லாபம் கிடைக்கிறது.

இந்த போலி நாட்டுக்கோழி முட்டை வியாபாரம் குறித்து திருச்சி உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலானவற்றில் கலப்படம் செய்யப்படுவது போன்று முட்டையிலும் இப்படி மோசடி நடப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story