பாசன வாய்க்கால்களை சீரமைக்காவிட்டால் காவிரி படுகை விவசாயம் பாலைவனமாவதை யாராலும் தவிர்க்க முடியாது


பாசன வாய்க்கால்களை சீரமைக்காவிட்டால் காவிரி படுகை விவசாயம் பாலைவனமாவதை யாராலும் தவிர்க்க முடியாது
x
தினத்தந்தி 31 Aug 2018 4:15 AM IST (Updated: 31 Aug 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

பாசன வாய்க்கால்களை சீரமைக்காவிட்டால் காவிரி படுகை விவசாயம் பாலைவனமாவதை யாராலும் தவிக்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.

வாய்மேடு,

நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் தெற்கில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி அமைத்த காலம் முதல் ஆதிதிராவிடர், சிறுபான்மையின மக்களுக்கு எதிரான பிரச்சினைகள், வகுப்பு வாதத்தின் பெயரிலான மோதல்கள் அதிகரித்து வந்துள்ளது. மாநில நலன்கள் பறிக்கப்படுவது போன்ற மக்களுக்கு எதிரான பல்வேறு பிரச்சினைகள் தலை தூக்கி வருகிறது.

இந்த நிலையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அந்த கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின், நன்றி தெரிவித்து பேசியபோது வகுப்பு வாதத்தை முறியடிப்போம் என பேசி இருப்பது வரவேற்க தக்கது. இன்றைய அரசியல் தேவையை உணர்ந்து அப்படி பேசியிருப்பது அவசிய தேவையாக உள்ளது. உறுதியான கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல, தமிழகத்தில் உள்ள ஆட்சி முதுகெலும்பு இல்லாத அரசாக இருப்பதாக அவர் தெரிவித்த கருத்தும் வரவேற்க தக்கது. காரணம் ஒற்றை குறிக்கோளை இலக்காக கொண்ட ஆட்சியாக உள்ளன. ஒற்றை குறிக்கோள் என்றால் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது.


அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு ஒரு மாதமாகியும் வேதாண்யம், நாகை, ஒரத்தநாடு என கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. நீர் நிலைகள் பராமரிப்பு குறைபாடுகளே இதற்கு காரணம். உடனடியாக மாநில அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வடிகால், பாசன வாய்க்கால்களை சீரமைக்காவிட்டால் இந்த ஆண்டும் காவிரி படுகை விவசாயம் பாலைவனமாவதை யாராலும் தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் செல்வராசு, மாவட்டச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

Next Story