உளுந்து பயிருக்கும் காப்பீடு வழங்க வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா


உளுந்து பயிருக்கும் காப்பீடு வழங்க வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தர்ணா
x
தினத்தந்தி 31 Aug 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

உளுந்து பயிருக்கும் காப்பீடு வழங்க வலியுறுத்தி அரியலூரில் குறைதீர்க்கும் கூட்டத் தில் விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் மற்றும் அச்சங்க நிர்வாகிகள், உளுந்து பயிருக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூட்டரங்கில் தர்ணாவில் ஈடுபட்டு, கலெக்டரிடம் மனு அளித்து கூட்டத்தில் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் செங்கமுத்து பேசுகையில், விவசாய குழுக்களுக்கு ரூ.50 ஆயிரம் மானியம், டிராக்டர் மற்றும் விவசாய தளவாடங்கள் வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள் பயன்படுத்தும் முறைப்பற்றி கண்காணிக்க வேண்டும். கூட்டுறவு துறை மூலம் வழங்கப்படும் பயிர்கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க மாநில தலைவர் அம்பேத்கர் வழியன் பேசுகையில், சம்பா சாகுபடி பணிகள் தொடங்க உள்ளதால் விவசாயிகளுக்கு தேவையான இடுப் பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும். திரு மழபாடியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். திருமழபாடி, குருவாடி, சுள்ளங்குடி, அழகிய மணவாளன், ஏலாக்குறிச்சி, தூத்தூர் ஆகிய பகுதிகளில் கொள்ளிட ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்றார்.

மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முகசுந்தரம் பேசுகையில், வீணாக கடலில் கலக்கும் கொள்ளிட நீரை தேக்கி வைக்க கொள்ளிடத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்டினால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் கொள்ளிடத்தில் புதிதாக கால்வாய்களை வெட்டி ஆறு குளங்களில் நீரை நிரப்பி விவசாயத்தை மேலும் வளர்க்க முடியும். இதை தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலர் ராஜேந்திரன் பேசுகையில், திருமழபாடி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் கொள்ளிட நீர் புகுந்ததால் அங்குள்ள பட்டா நிலங்கள், வெள்ளத்தில் பாதிப்படைந்து விட்டது. அவற்றை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். திருமானூர் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள குறுவை நெல் பயிர் நோயில் பாதிக்கப்பட்டு நுனி கருகி உள்ளது. அவற்றை ஆய்வு செய்து இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் விவசாயிகள் பேசுகையில் ஆறு, ஏரி, குளம், வாரி உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த ஊக்கத்தொகை தாமதம் இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கை களுக்கு கலெக்டர் விஜயலட்சுமி பதில் அளித்தார்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பரிதாபானு, வேளாண் துணை இயக்குனர் பழனிசாமி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பு ராஜன் மற்றும் அனைத் துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story