திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டி


திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டி
x
தினத்தந்தி 31 Aug 2018 4:30 AM IST (Updated: 31 Aug 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் வருகிற (செப்டம்பர்) 15-ந் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தது தவறு என்று உணர்ந்ததால் மன்னிப்பு கேட்டேன். தற்போது 3-வது நீதிபதி முன்பு விசாரணை நடந்து வருகிறது. வழக்கின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்த பிறகு ஆட்சியை கலைக்காமல் புதிய முதல்-அமைச்சர் நியமனம் செய்யப்பட்டு, ஆட்சி தொடரும்.

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிடும். அ.தி.மு.க. பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெறும். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் டாப்பு, அ.தி.மு.க. டூப்பு என்பது தெரியவரும். அதன் பின்னர் ஆட்சியையும், கட்சியையும் எங்களிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் அ.தி.மு.க. நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

ஆனால் கருணாநிதி இறந்த பிறகு அண்ணா சமாதியில் அவரது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, அ.தி.மு.க. மேல்முறையீடு செய்யாதது ஏன்?. இதில் இருந்து தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி அமைத்து செயல்பட்டு வருவது தெரிய வருகிறது. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று உள்ளதற்கு வாழ்த்துகள். ஆனால் சமீபகாலமாக பா.ஜ.க.வோடு தி.மு.க. நெருங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பரணி.கார்த்திகேயன், நகர செயலாளர் வீரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Next Story