மயிலாடுதுறையில் பரபரப்பு: சிறைச்சாலை அருகே 20 அடி ஆழத்தில் தோன்றிய ‘திடீர்’ பள்ளம்


மயிலாடுதுறையில் பரபரப்பு: சிறைச்சாலை அருகே 20 அடி ஆழத்தில் தோன்றிய ‘திடீர்’ பள்ளம்
x
தினத்தந்தி 30 Aug 2018 10:30 PM GMT (Updated: 30 Aug 2018 8:10 PM GMT)

மயிலாடுதுறை சிறைச்சாலை அருகே ‘திடீர்’ என்று பள்ளம் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அது பாதாள சாக்கடையில் ஏற்பட்ட உடைப்பு என்று தெரிந்த பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 2003-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் ரூ.20 கோடி நிதி, மாநில அரசின் ரூ.15 கோடி நிதி, பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.7 கோடி நிதி என மொத்தம் ரூ.42 கோடி மதிப்பில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு (2017) முதல் மயிலாடுதுறை பகுதியில் உள்ள பாதாள சாக்கடை குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மயிலாடுதுறை கிளை சிறைச்சாலையின் சுற்றுச்சுவர் அருகே ‘திடீர்’ என்று 20 அடி ஆழத்தில் பள்ளம் தோன்றியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலச்சரிவாக இருக்குமோ என்று மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த சிலர் பள்ளம் அருகே சென்று பார்த்தபோது, பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதனால் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

நேற்று முன்தினம் மயிலாடுதுறை வழியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரு திருமண விழாவுக்கு சென்றதால், அந்த பள்ளத்தில் மண் போடப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மண் உள்வாங்கியதால் நேற்று மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. மேலும் பள்ளத்தில் பாதாள சாக்கடை குழாயில் இருந்து வெளியேறிய கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதாள சாக்கடை உடைப்பு காரணமாக கிளை சிறைச்சாலை சுற்றுச்சுவரும் இடிந்து விழும் ஆபத்து இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதனிடையே மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் காந்திராஜன், உடைப்பு ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து ‘திடீர்’ பள்ளங்கள் தோன்றி பீதியை ஏற்படுத்துகின்றன. மழை காலம் நெருங்கி வரும் நிலையில், பாதாள சாக்கடையில் இதுபோன்று உடைப்பு ஏற்படுவது விபத்துக்கு வழிவகுக்கும். பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, பள்ளம் தோன்ற வாய்ப்புள்ள இடங்களை நகராட்சி நிர்வாகம் முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியத்தால் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

Next Story