தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 30 Aug 2018 10:15 PM GMT (Updated: 30 Aug 2018 8:17 PM GMT)

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த மாதத்தில் விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 169 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தமிழக போக்குவரத்துத்துறை ஆணையர் மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர்களின்அறிவுரையின்படி கடந்த மாதத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் போக்குவரத்து தொடர்பாக சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டன. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.

மொத்தம் 8 ஆயிரத்து 393 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 1,302 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. இதில் விதிமுறைகளை மீறி இயக்கிய வாகனங்களுக்கு ரூ.20 லட்சத்து 31 ஆயிரத்து 700 அபராதமாக விதிக்கப்பட்டு ரூ.11 லட்சத்து 26 ஆயிரத்து 380 உடனடியாக வசூலிக்கப்பட்டது.

முறையாக வரி கட்டாமல் இயக்கப்பட்ட சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்கள், வேன், பொக்லின் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் கார்கள் ஆகியவற்றின் உரிமையாளர்களிடம் தமிழ்நாட்டிற்கான சாலை வரியாக ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 20 வசூலிக்கப்பட்டது. அதிக ஆட்களை ஏற்றிச் சென்ற 115 வாகனங்கள் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 329 வாகனங்களின் மீதும், காப்புச்சான்று இல்லாத 208 வாகனங்கள் மீதும், கண் கூசும் முகப்பு விளக்கு பொருத்திய 102 வாகனங்களின் மீதும், ஒளிரும் சிவப்பு பிரதிபலிப்பு நாடா இல்லாத 124 வாகனங்களின் மீதும், தகுதிச்சான்று இல்லாத 91 வாகனங்களுக்கும், தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குற்றங்களுக்காக 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அதிவேகமாக வாகனங்கள் ஓட்டி சென்ற 15 வாகனங்களுக்கும், குடிபோதையில் வாகனங்கள் இயக்கிய 2 வாகனங்களுக்கும், தலைக்கவசம் அணியாமல் இயக்கிய 55 வாகன ஓட்டிகளுக்கும், செல்போன் பேசியபடி வாகனங்கள் இயக்கிய 6 வாகன ஓட்டிகளுக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்கள் இயக்கிய 139 வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் அதிக எடை ஏற்றி இயக்கிய 113 வாகன ஒட்டிகளுக்கும் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன.

தமிழக அரசு உத்தரவுப்படி அனைத்து வாகன ஒட்டிகளும் கட்டாயம் அசல் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனத்தின் அசல் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். இருசக்கர வாகனம் ஒட்டுபவர்களும், பின்புறம் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணியாத ஓட்டுனர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் பள்ளி வாகனம் உள்ளிட்ட வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும். அவ்வாறு பொருத்தப்படாத வாகனங்களுக்கு உடனடியாக கருவி பொருத்தி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காண்பித்து பதிவு சான்றிதழ் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story