வேலை வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை


வேலை வழங்க கோரி ஊராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 31 Aug 2018 4:15 AM IST (Updated: 31 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

அனைவருக்கும் வேலை வழங்க கோரி அதவத்தூர் ஊராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

சோமரசம்பேட்டை,

சோமரசம்பேட்டையை அடுத்துள்ள அதவத்தூர் ஊராட்சியில் 100 நாள் வேலை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் நேற்று காலை அதவத்தூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊராட்சி செயலாளர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது தினமும் 70பேருக்கு வேலை வழங்கப்படும் என்றும், வாரம் ஒருமுறை வேலை செய்யாதவர்களுக்கு சுழற்சி முறையில் வேலை வழங்கப்படும் என்றும், வேலை அதிகம் இருந்தால் மேலும் அதிகப்படியான நபர்களுக்கு ே-்வலை வழங்கப்படும் எனவும் எடுத்துரைத்தனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி எட்டரை ஊராட்சி அலுவலகத்தை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். அவர்களிடம் அந்தநல்லூர் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, பணிமேற்பார்வையாளர் கோபிநாத், ஊராட்சி செயலாளர் (பொறுப்பு) அறிவழகன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதில் சுழற்சி முறையில் தான் வேலை வழங்கப்படும் என தெரிவித்த பின்னர் போராட்டம் நடத் தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story