மானாமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி


மானாமதுரை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 30 Aug 2018 10:30 PM GMT (Updated: 30 Aug 2018 8:31 PM GMT)

மானாமதுரை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் பலியானார். மேலும் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர காட்டிற்குள் புகுந்ததில் 10 பயணிகள் படுகாயமடைந்தனர்.

மானாமதுரை,

சிவகங்கையில் இருந்து மானாமதுரைக்கு தனியார் பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று வழக்கம்போல் மானாமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர் என 60-க்கும் மேற்பட்டோர் அந்த பஸ்சில் பயணம் செய்தனர். இதேபோன்று சிவகங்கை அருகே துவங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவருடைய மகன் சரவணக்குமார்(வயது 26) வேலை தொடர்பாக மானாமதுரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மானாமதுரை அருகே காட்டூரணி பகுதியில் தனியார் பஸ் வந்தது. பஸ்சின் முன்னால் சரவணக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் சென்ற தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சரவணக் குமார் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.

மேலும் கட்டுப்பாட்டை இழந்த பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு சாலையோரம் இருந்த மரங்கள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பஸ்சில் சென்ற 10 பயணிகள் படுகாயமடைந்தனர். மேலும் சிலர் சிறு காயங்களுடன் தப்பினர். பின்னர் விபத்தில் படுகாயமடைந்த 10 பேரும் மானாமதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் சமீப காலமாக அதிவேகத்தில் செல்லும் தனியார், அரசு பஸ்களால் விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் அதிவேகமாக சென்ற பஸ்களால் விபத்துகள் அரங்கேறி உள்ளன.

இதில் 4 பேர் பரிதாபமாக இறந்துபோனார்கள். தற்போது மானாமதுரை அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே அதிவேகமாக செல்லும் பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story