வாட்ஸ்–அப் மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலின் தலைவன் கைது


வாட்ஸ்–அப் மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலின் தலைவன் கைது
x
தினத்தந்தி 1 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் வாட்ஸ்–அப் மூலம் இயங்கிய பயங்கரவாத கும்பலின் தலைவனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் ரகசிய கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து வந்த பயங்கரவாத கும்பலை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தது. வீரமரணம் எங்கள் இலக்கு என்ற கொள்கையுடன் வாட்ஸ்–அப் குழு அமைத்து செயல்பட்டு வந்த இந்த கும்பலை சேர்ந்த கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்த முகம்மது பக்கீர் மகன் முகம்மது ரிபாஸ் (வயது 37), தேவிபட்டிணம் சின்ன பள்ளிவாசல் தெருவை சேர்ந்த உசேன் முபாரக் மகன் முபாரிஸ் அகமது (27), திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை செய்யது ரபீக் மகன் ரிஸ்வான் முகம்மது (24), சஜித் அகமது(25), தேவிபட்டிணம் பஸ்நிலைய தெரு ஜாகிர் உசேன் மகன் அபுபக்கர்சித்திக் (21), சேலம் அம்மாபேட்டை இதயத்துல்லா மகன் லியாக்கத்அலி (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தனிப்படை போலீசார் இந்த கும்பலின் தலைவனான தேவிபட்டிணம் மேலபள்ளிவாசல் தெருவை சேர்ந்த அன்புபகுர்தீன் மகன் சேக்முகம்மது (31) என்பவரை போலீசார் தேடிவந்தனர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் பகுதியில் சொந்தமாக படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வந்ததோடு, இந்த குழுவின் தலைவனாக இருந்து செயல்பட்டு வந்துள்ளார். இவர் போலீசார் தேடுவதைஅறிந்து தலைமறைவாகிவிட்டார்.

இந்த கும்பலை சேர்ந்த தேவிபட்டினம் அஸ்பர், கடலூர் பரங்கிபேட்டை அப்துர்ரசீத், திருவாரூர் முத்துப்பேட்டை இம்தியாஸ் ஆகியோரையும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் இந்த பயங்கரவாத கும்பலின் தலைவனான தேவிபட்டிணம் சேக்முகம்மது என்பவர் குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் விரைந்து சென்று சேக்முகம்மதுவை கைது செய்து கொண்டு வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின்பேரில் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார், அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கடந்த 5 மாதங்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாத கும்பலின் தலைவன் சிக்கியுள்ளதால் அவரிடமிருந்து, பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.


Next Story