இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு


இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 1 Sept 2018 4:45 AM IST (Updated: 1 Sept 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் வசதிகள் உள்ளது என்று சேலத்தில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாநகர காவல்துறை சார்பில் பள்ளிகளில் உள்ள சாலை பாதுகாப்பு ரோந்து குழுக்களுக்கு சீருடைகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலம் நேரு கலையரங்கில் நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 2 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 81 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு ரோந்து சீருடைகள் மற்றும் உபகரணங்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசிய தாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கல்வித்தரம் உயர்ந்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் அதிகளவில் இருப்பதால் அந்தந்த பகுதியில் வசிக்கும் மாணவ-மாணவிகள் மிக எளிதாக கல்வி கற்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ செல்வங்கள் சிறந்த கல்வி கற்க வேண்டும் என்பதற்காக இலவசமாக காலணி, சீருடை, நோட்டு, புத்தகம், பேக், சைக்கிள் மற்றும் அறிவுபூர்வமான கல்வி கற்பதற்கு மடிக்கணினி, எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 படித்தால் ஊக்கத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இன்றைக்கு கல்வித்தரம் உயர்ந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

மாணவ-மாணவிகளுக்கு எந்தெந்த வழியில் சிறப்பான கல்வி கொடுக்கலாம் என ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அரசு அத்தனை திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது. மாணவர்களுக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள், விளையாட்டு மைதானம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் அரசு பள்ளிகளில் உள்ளது.

குறிப்பாக சொல்லபோனால் தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் அரசு பள்ளியில் படித்தால் உயர் கல்விக்கும், தொழில் கல்விக்கும் போக முடியாது என்ற எண்ணத்தை மாற்றி இன்றைக்கு அரசு பள்ளிகளில் படித்தால் உயர்கல்வி, தொழிற்கல்வியில் சேர முடியும் என்ற சூழ்நிலையை அரசு உருவாக்கியுள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் உயர் கல்விக்கு போக முடியும். அதற்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த காலத்தில் 65 அரசு கலைக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பிறகு அவரது மறைவுக்கு பின் தற்போது 11 அரசு கலைக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கிராமப்புற மாணவ-மாணவிகள் உயர்கல்வியை பயின்று வருகிறார்கள். அதாவது 2011-ம் ஆண்டுக்கு பின் அ.தி.மு.க.ஆட்சியில் 76 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தமிழக மாணவ-மாணவிகளுக்கு கொடுத்து, அதன்மூலம் ஆயிரக்கணக்கானோர் உயர் கல்வி கற்க கூடிய சூழலை உருவாக்கி தந்துள்ளோம். இந்தாண்டு கூடுதலாக 20 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதற்காக அரசு உத்தரவு வழங்கி, அதன்பேரில் அனைத்து அரசு கல்லூரிகளிலும் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டு கல்வி பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் உயர்வு, வளர்ச்சி கல்வியை பொறுத்துதான் அமையும். எந்த ஒரு நாட்டிலும், எந்த ஒரு மாநிலத்திலும் கல்வி வளர்ச்சி அதிகம் இருக்கிறதோ? அங்கு பொருளாதாரம் மேம்பாடு அடையும். அனைத்து வளர்ச்சிகளையும் பார்க்க முடியும். அமைதி, பண்பு நிலவும். இவை அத்தனையும் கிடைக்க வேண்டும் என்றால் கல்வி முக்கியம். அப்படிப்பட்ட கல்வியை தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடக்கும் அ.தி.மு.க. அரசு வழங்கி வருகிறது.

கல்வி கற்றவர்கள் சென்ற இடமெல்லாம் புகழ் என்பார்கள். ஆகவே கல்வி என்பது காலத்தால் அழிக்க முடியாத செல்வம். எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், ஏதாவது ஒரு வழியில் அதனை நாம் இழந்து விடுகிறோம். ஆனால் வாழ்நாள் முழுவதும் உங்களோடு இருக்கிற ஒரே செல்வம் கல்வி மட்டும் தான். இளம்பருவத்தில் மாணவ-மாணவிகள் தங்களுடைய கடமையை உணர்ந்து பெற்றோர்களின் நிலைமைய அறிந்து சிறப்பான முறையில் படித்து உயர்வடைய வேண்டும்.

தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால் சேலம் மாநகராட்சியில் இப்போதே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடை செய்யும் சூழலை மாநகராட்சி ஆணையாளர் உருவாக்கி இருக்கிறார். இதற்காக அவருக்கு எனது நன்றி. ஒருமுறை பயன்படுத்திய பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், சேமித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடைவிதித்து உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,000 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.165 கோடியில் பெரியார் பேரங்காடி, போஸ் மைதானம் மற்றும் நேரு கலையரங்கம் சீரமைக்கப்படும். ரூ.150 கோடியில் சூரிய சக்தி மூலம் 30 மெகாவாட் மின் உற்பத்தி, ரூ.114 கோடியில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள், ரூ.92 கோடியே 13 லட்சம் மதிப்பில் சேலம் பழைய பஸ்நிலையம் அதிநவீன இரண்டடுக்கு பஸ் நிலையமாக பன்னாட்டு தரத்தில் மாற்றியமைக்கப்படும். ரூ.50 கோடியில் குமரகிரி ஏரியினை மேம்படுத்துதல், ரூ.47 கோடியில் சீர்மிகு சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட 25 திட்டப்பணிகள் ரூ.1,000 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. சேலம் மாநகராட்சியில் 12 இடங்களில் பசுமை வெளி பூங்காக்களை சேலம் மாநகர மக்களின் பயன்பாட்டிற்காக இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது.

சாலை பாதுகாப்பு ரோந்துப் பணி என்பது தனியே செயல்படக்கூடிய அமைப்பாகும். சேலம் மாவட்டத்தில் பல பள்ளிகள் போக்குவரத்து நெரிசலான பாதையில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு பகுதியில் இருக்கும் போக்குவரத்து இடத்திலும் பணியில் இருக்கும் போலீசாரை வைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது நடைமுறையில் சாத்தியப்படாததாகும். அந்தந்த பகுதிகளிலே சாலை பாதுகாப்பு ரோந்து பணிக்கு ஏற்படுத்தப்பட்ட அந்த பள்ளி மாணவ, மாணவிகள் உறுப்பினராக சேர்ந்து பயிற்சி பெற்று அவர்கள் மூலம் அந்தப் பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.

சேலம் மாநகரத்தில் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே சாலை பாதுகாப்பு ரோந்து பணி அமைப்பு உள்ளது. தற்போது அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தும் விதமாக சேலம் மாநகரத்தில் 33 அரசுப் பள்ளிகள், 19 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 44 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சாலை பாதுகாப்பிற்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் சேலம் மாநகரில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தாண்டு இதுவரை 81 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட இந்தாண்டு விபத்து குறைந்துள்ளது. சேலம் மாநகரத்தில் சாலை பாதுகாப்பு நிதியாக ரூ.1 கோடியே 15 லட்சத்து 30ஆயிரத்து 30 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த நிதியில் இருந்து சேலம் மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு, பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

சாலை பாதுகாப்பு ரோந்துப் பணியில் ஈடுபடும் மாணவ, மாணவிகள் சாலை விதிகளின்படி சாலை பாதுகாப்பு ஒழுங்குபடுத்தும் பணியை மேற்கொள்ள, சாலை விதிகளைப் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டு, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

சேலம் மாநகர மக்களின் தேவைக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சி வருவதற்கு முன்பு சேலம் மாநகரம் எப்படி இருந்தது? 2011-ம் ஆண்டுக்கு பிறகு சேலம் மாநகராட்சி எப்படி இருக்கிறது? என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். கடந்த 7½ ஆண்டுகளில் சேலம் மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செயல்படுத்தி இருக்கிறது. அதிகமான பாலங்கள் சேலம் மாநகரத்திலே கட்டப்பட்டு சேலம் மாநகரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக இன்றைக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 ஆண்டுகளில் சேலம் மாநகரம் தமிழகத்திலேயே ஒரு முன் மாதிரி மாநகரமாக திகழும்.

பள்ளி மாணவர்கள், உங்களுடைய பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்பொழுது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென்று நீங்கள் சொல்ல வேண்டும். விலைமதிக்க முடியாத உயிர் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. அதை பாதுகாப்பது அனைவரது கடமை. இருசக்கர வாகனத்தில் செல்கின்ற நம்முடைய பெற்றோர்களை வலியுறுத்தி நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

நிகழ்ச்சியில், எம்.பி.க்கள் பன்னீர்செல்வம், காமராஜ், மாவட்ட கலெக்டர் ரோகிணி, போலீஸ் கமிஷனர் சங்கர், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், வெற்றிவேல், மனோன்மணி, சித்ரா, சின்னதம்பி, மருதமுத்து, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் அஸ்தம்பட்டி பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் இருந்த முதல்-அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்காக சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், துணைத்தலைவர், இயக்குனர்கள் பலர் அங்கு வந்திருந்தனர். இதையடுத்து ஒவ்வொரு கூட்டுறவு சங்க நிர்வாகிகளாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் முதல்-அமைச்சரை சந்தித்து சால்வை மற்றும் பூச்செண்டுகளை கொடுத்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று புதிய கூட்டுறவு சங்க நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், சேலம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் துரைராஜ், சேலம் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவர் சதீஷ்குமார், பேர்லேண்ட்ஸ் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் பெரியபுதூர் கண்ணன், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.ராமராஜ், சொர்ணபுரி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கே.சி.செல்வராஜ், குமாரசாமிப்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் ஜான்கென்னடி, அய்யம்பெருமாப்பட்டி நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் அய்யந்துரை, சூரமங்கலம் கூட்டுறவு வீடு கட்டும் சங்க தலைவர் ராஜலிங்கம், மாமாங்கம் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story