வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்


வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2018 3:30 AM IST (Updated: 1 Sept 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:–

வடகிழக்கு பருவமழையின்போது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வரப்படும் புகார்கள் குறித்த விவரங்களை உரிய பதிவேட்டில் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு, குடிசை வீடுகள் சேதம் ஆகியவை தொடர்பான அறிக்கையை காலதாமதமின்றி உடனுக்குடன் தாசில்தார்களால் தெரிவிக்கப்பட வேண்டும்.

தீயணைப்பு துறையினர், முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்கங்களை பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு செய்து காட்ட வேண்டும். அதேநேரத்தில் ரப்பர் படகுகள், மீட்பு படகுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித்துறையினர் புயல் பாதுகாப்பு இல்லங்கள், பள்ளி கட்டிடங்கள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தங்க வைப்பதற்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் தங்க வைக்கவும் பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினர் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

சாலைகளில் மரங்கள் விழுதல், மின்கம்பிகள் அறுந்து விழுதல், மின்கம்பங்கள் சாய்தல் போன்றவற்றை நெடுஞ்சாலைத்துறையினர் உடனுக்குடன் சரிசெய்து சீரான போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ரே‌ஷன் கடைகளில் போதிய அளவில் உணவு பொருட்கள் இருப்பில் வைக்கப்பட வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள குளங்கள், குட்டைகள், ஏரிகள் ஆகியவை உடைப்பு ஏற்படாமல் பாதுகாப்பு தன்மையுடன் உறுதியாக உள்ளதை என்பதை முன்கூட்டியே ஆய்வு செய்ய வேண்டும்.

மழை காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் இதர நோய்களுக்கு ஏற்றவாறு போதுமான அளவு மருந்துகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். மருத்துவர்கள் விடுப்பில் செல்லாமல் சுழற்சி முறையில் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும். போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து பஸ்களையும் பழுதுகள் சரிபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மொத்தத்தில் அனைத்துத்துறை அலுவலர்களும் அவசர காலத்தில் விடுப்பில் செல்லாமல் உரிய மக்கள் பணியாற்றி அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், சப்–கலெக்டர்கள் சாருஸ்ரீ, மெர்சிரம்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story