ஏரி, கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்


ஏரி, கால்வாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:00 AM IST (Updated: 1 Sept 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

ஏரி மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளும், அதற்கு அதிகாரிகள் அளித்த பதில்களும் வருமாறு:-

சுந்தரம்:- நாமக்கல் மாவட்டத்தில் 2016-ம் ஆண்டில் வேளாண் காப்பீட்டு திட்டத்தில் பிரீமியம் செலுத்தி பயிர் பாதிப்பு ஏற்பட்ட விவசாயிகள் சிலருக்கு இதுவரை காப்பீட்டு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 6 மாதங்களாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. கொல்லிமலையில் இருந்து வரும் மழைநீர் காளப்பநாயக்கன்பட்டி வரை பல்வேறு ஏரி, குளங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ளது. எனவே கொல்லிமலையில் இருந்து காளப்பநாயக்கன்பட்டி வரையிலான வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும். மேலும் பொம்மசமுத்திரம் ஏரியில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. ஆனால் முழுமையாக அகற்றப்படவில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சப்-கலெக்டர் கிராந்திகுமார் :- பொம்மசமுத்திரம் ஏரி ஆக்கிரமிப்புகள் இன்னும் ஒரு வார காலத்தில் முழுமையாக அகற்றப்படும்.

துரைசாமி:-இந்த ஆண்டில் நிலக்கடலை பயிரிட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் நாமக்கல் மாவட்டத்தை சேர்க்க வேண்டும்.

சந்திரசேகர்:- நாமக்கல் மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வங்கியாளர்கள், விவசாயிகள் அடங்கிய குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்.

சரவணன்:- குறைதீர் கூட்டம் சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுகிறது. இங்கு தெரிவிக்கப்படும் எந்த கோரிக்கைக்கும் தீர்வு கிடைப்பதில்லை. விவசாயிகளிடமிருந்து லிட்டர் ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்படும் பால், நுகர்வோருக்கு ரூ.41-க்கு விற்கப்படுகிறது. 30 சதவீத லாபத்துக்கு பால் விற்பனை செய்யப்பட்டாலும், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியாகும் விலை வழங்கப்படுவது இல்லை. பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 4 வாரங்களாக பால் பணம் வழங்கப்படவில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை பால் உற்பத்தியாளர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு ஒருமுறை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பிறகு இதுவரை அந்த கூட்டம் நடத்தப்படவில்லை.

சப்-கலெக்டர்:- கோரிக்கைகளை மனுவாக அளித்தால், அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும்.

வரதராஜன்:- சேந்தமங்கலம் தாலுகா பெரியகுளம் ஏரியில் நீர் மூழ்கும் பகுதி சுமார் 28 ஏக்கர் உள்ளது. கரையின் அருகில் விவசாய நிலம் வைத்து உள்ளவர்கள் அருகில் உள்ள ஏரிக்கு சொந்தமான இடத்தில் மண்ணைக்கொட்டி சமன்செய்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த 10 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை நேரில் வலியுறுத்தியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, தடுக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சப்-கலெக்டர்:-பெரியகுளம் ஏரியை நேரடியாக ஆய்வு செய்து முழுமையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story