காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி, குறுவை தொகுப்பு திட்டம், வேளாண் எந்திரமயமாக்கும் திட்டம் மற்றும் ஆவின் ஆகிய திட்டங்கள் குறித்த விளக்க கையேட்டினை வெளியிட்டார். இந்த கையேட்டினை விவசாயிகள் பெற்று கொண்டனர்.

கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் மிசா மாரிமுத்து பேசுகையில், “காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போது புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியை சந்தித்து வருகிறது. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இருந்தால், தற்போது புதுக்கோட்டை உள்ளிட்ட 7 தென்மாவட்டங்கள் வறட்சியில் இருந்து தப்பித்து இருக்கும். வரத்து வாரிகளை தூர்வார வேண்டும். இல்லையென்றால், நான் கோர்ட்டுக்கு செல்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை“ என்றார்.

விவசாயி சேகர் பேசுகையில், விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்களில் இருந்து பயிர் கடன் வழங்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்புக்காக ஏற்படும் காலதாமதத்தால் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே தகுந்த நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். என்றார்.

விவசாயி அத்தானி ராமசாமி பேசுகையில், காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு 40 நாட்கள் மேலாகியும் இன்னும் கடைமடை பகுதியான நாகுடி பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. மேட்டூரில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், முறை வைக்காமல் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். என்றார்.

விவசாயி துரை மாணிக்கம் பேசுகையில், கோமாரி நோய் 100 ஆண்டுகளாக கால்நடைகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இதனை நாம் இன்னும் ஒழிக்க முடியவில்லை. சில நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. ஆனால் நோய் ஒழிப்புக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்றார்.

விவசாயி கோவிந்தராஜ் பேசுகையில், காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

விவசாயி நாகையா, புதுக்கோட்டை மாவட்டத்தில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டையை வறட்சி மாவட்ட மாவட்டமாக அறிவித்து வறட்சி நிவாரணம் பெற்று விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகள் பலர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதி வாளர் மிருணாளினி, வேளாண்மை இணை இயக்குனர் மனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதிதங்கம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story