வெள்ளப்பெருக்கால் 476 எக்டேரில் நெல், கரும்பு, வாழை பயிர்கள் பாதிப்பு


வெள்ளப்பெருக்கால் 476 எக்டேரில் நெல், கரும்பு, வாழை பயிர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 31 Aug 2018 9:44 PM GMT (Updated: 31 Aug 2018 9:44 PM GMT)

லால்குடி, தொட்டியம், அந்தநல்லூரில் வெள்ளப்பெருக்கால் 476 எக்டேரில் நெல், கரும்பு மற்றும் வாழை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ராஜாமணி தெரிவித்தார்.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை கலெக்டரிடம் தெரிவித்தனர். கூட்டத்தில் கலெக்டர் ராஜாமணி பேசியதாவது:-

கர்நாடகாவில் பெய்த கனமழையினால் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக மாவட்டத்தில் லால்குடி, தொட்டியம், அந்தநல்லூர் ஆகிய வட்டாரங்களில் வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இதில் லால்குடி வட்டாரத்தில் வெள்ள பாதிப்பால் 208 எக்டேர் நெற்பயிரும், 17 எக்டேர் கரும்பு பயிரும், தொட்டியம், அந்தநல்லூர் வட்டாரங்களில் தோட்டக்கலை பயிரான வாழை 251 எக்டேர் என மொத்தம் 476 எக்டேரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் சேதமடைந்த புள்ளி விவரம் குறித்து விரைவில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு இழப்பீடு தொகை பெற மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்கள் மூலம் இதுவரை குறைந்த அளவில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். வாழை, சின்னவெங்காயம், மரவள்ளி, மஞ்சள் ஆகியவற்றுக்கு வருகிற அக்டோபர் மாதம் 1-ந் தேதி வரை காப்பீடு செய்து கொள்ளலாம்.

2018-19-ஆம் ஆண்டிற்கு மத்திய கூட்டுறவு வங்கியின் மூலமாக பயிர்க்கடன் ரூ.317 கோடி வழங்குவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 9,215 விவசாயிகளுக்கு ரூ.56.56 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 76 ஏரிகளில் வெள்ளநீர் நிரப்பப்பட்டுள்ளது. புதிய கட்டளை கால்வாய், உய்யகொண்டான் வாய்க்கால், புள்ளம்பாடி கால்வாய், பெருவளை கால்வாய் ஆகியவற்றின் மூலம் 76 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இதில் 5 ஏரிகளில் 100 சதவீதம் நீர் நிரப்பப்பட்டுள்ளது. 14 ஏரிகளில் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் நீர் நிரப்பப்பட்டுள்ளது.

20 ஏரிகளில் 50 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை நீர் நிரப்பப்பட்டுள்ளது. 14 ஏரிகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை நீர் நிரப்பப்பட்டுள்ளது. 3 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 ஏரிகளில் நீர் நிரப்பிட பொதுப்பணித்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து ஏரிகளிலும் 100 சதவீதம் தண்ணீர் நிரப்பப்படும். நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான விதை நெல், உரம் ஆகியவை போதுமான அளவில் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பால்ராஜ், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமா மகேஸ்வரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (ஆற்றுப்பாதுகாப்புக் கோட்டம்) டி.பி.கணேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) சாந்தி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story