திருச்சியில் பரபரப்பு அ.தி.மு.க. பதாகைகளை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி திடீர் போராட்டம்


திருச்சியில் பரபரப்பு அ.தி.மு.க. பதாகைகளை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2018 5:00 AM IST (Updated: 1 Sept 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பதாகைகளை அகற்றக்கோரி டிராபிக் ராமசாமி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி,

தமிழகத்தில் எந்த நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தாலும் உடனடியாக அதை கிழித்து அகற்றும் போராட்டத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஈடுபடுவார். இவர் நேற்று திருச்சிக்கு வந்தார். திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. வரதராஜை சந்தித்து, போக்குவரத்துக்கு இடையூறாக அரசியல் கட்சியினர் வைத்துள்ள பதாகைகளை அகற்ற போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுக்க நீங்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு ஐ.ஜி., ஆவன செய்வதாக தெரிவித்தார்.

அதன் பின்னர், திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு டிராபிக் ராமசாமி காரில் வந்தார். அங்கு போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்தார். அவரிடம், “திருச்சி மாநகரில் பல இடங்களில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் அகற்றப்படாமல் உள்ளது. அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் நானே அவற்றை அகற்றுவேன்” என்று கூறிவிட்டு வெளியேறினார்.

பின்னர் அங்கிருந்து காரில் டி.வி.எஸ். டோல்கேட் நோக்கி அவர் வந்தார். அப்போது வழியில் சுப்பிரமணியபுரம் சுந்தராஜ்நகரில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான குமார் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் குமார் எம்.பி. ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.

அந்த பதாகையை பார்த்ததும், டிராபிக் ராமசாமி உடனடியாக காரை நிறுத்தி அதில் இருந்து இறங்கி வந்தார். இந்த பதாகையை அகற்றும் வரை இங்கிருந்து செல்லமாட்டேன் என்று கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்த தொண்டர்கள் சிலர் வந்து, அங்கிருந்த பதாகையை அகற்றினர். சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பின்னர் அங்கிருந்து டிராபிக் ராமசாமி புறப்பட்டு சென்றார்.

Next Story