திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுர வாசல் மண்டப மேற்கூரையில் விரிசல்


திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுர வாசல் மண்டப மேற்கூரையில் விரிசல்
x
தினத்தந்தி 1 Sept 2018 4:35 AM IST (Updated: 1 Sept 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் தியாகராஜர் கோவில் கோபுர வாசல் மண்டப மேற்கூரையில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இந்த கோவில் சர்வதோஷ பரிகார தலமாகவும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலின் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகக்பெரியது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தஞ்சை பெரிய கோவில் திருவாரூர் தியாகராஜர் கோவிலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது என்ற பெருமைக்குரியது.

இந்த சிறப்புக்குரிய கோவிலின் மேற்கு கோபுர வாசலில் குளமே ஆலயமாக விளங்கும் கமலாலய குளம் அமைந்துள்ளது. இந்த மேற்கு கோபுர வாசலில் நுழைவு பகுதியில் கோவில் நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகம் முன்பு பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் நடைபாதையில் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் மேற்கூரையில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நடைபாதை மண்டபம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

தற்போது மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் மழை காலம் என்பதால் தண்ணீர் கசிவு ஏற்பட்டு மேலும் கட்டிடம் வலுவிழக்கும் நிலை உள்ளது. இதனால் ஏதேனும் விபத்து ஏற்படும் முன்பு கட்டிடம் வலுவாக உள்ளதா? என்பதை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் கோவில் விபத்துகள் ஏற்பட்டு வரும் நிலையில் திருவாரூர் தியாகராஜர் மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவில் அதிகாரி கூறுகையில், கோவில் நடைபாதை மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து துறை ரீதியாக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். பழமை வாய்ந்த கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பரிந்துரையின் படி மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Next Story