நீலகிரியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு


நீலகிரியில் வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 1 Sept 2018 7:17 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 3 சட்டமன்ற தொகுதிகளில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வெளியிடப்பட்டது.

இதை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டார். பின்னர் அவர் அந்த நகல்களை அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ், தாசில்தார்கள் தினேஷ், சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 95 ஆயிரத்து 774 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 2 ஆயிரத்து 552 பெண் வாக்காளர்கள், 6 திருநங்கைகள் என மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரத்து 332 வாக்காளர்கள் உள்ளனர்.

குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 88 ஆயிரத்து 894 ஆண் வாக்காளர்கள், 96 ஆயிரத்து 373 பெண் வாக்காளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 268 வாக்காளர்கள் உள்ளனர்.

கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 87 ஆயிரத்து 957 ஆண் வாக்காளர்கள், 91 ஆயிரத்து 325 பெண் வாக்காளர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 283 வாக்காளர்கள் உள்ளனர்.

நீலகிரியில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் சேர்த்து 2 லட்சத்து 72 ஆயிரத்து 625 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 90 ஆயிரத்து 250 பெண் வாக்காளர்கள், 8 திருநங்கைகள் என மொத்தம் 5 லட்சத்து 62 ஆயிரத்து 883 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட 17 ஆயிரத்து 625 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். 18–19 வயது இடையே 1,198 ஆண் வாக்காளர்கள், 954 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,152 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 10–ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற எச்.பி.எப். பகுதியில் இருந்த 584 வாக்காளர்கள் உள்பட 938 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் எச்.பி.எப். வாக்குச்சாவடி ஒன்று நீக்கப்பட்டு உள்ளது. கடந்த முறை வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை விட தற்போது 1,345 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 239 வாக்குச்சாவடிகள், குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 223 வாக்குச்சாவடிகள், கூடலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 221 வாக்குச்சாவடிகள் என மொத்தம் நீலகிரியில் 683 வாக்குச்சாவடிகள் உள்ளன. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது நீலகிரி மாவட்டத்தில் ஆடாசோலை ஊராட்சி ஒன்றிய பள்ளி, ஊட்டி தூய இருதய ஆண்டவர் மேல்நிலைப்பள்ளி, நொண்டிமேடு புனித தாமஸ் ஆரம்பப்பள்ளி, எருமாடு அருகே உள்ள கொன்னச்சால் ஊராட்சி ஒன்றிய பள்ளி, கொன்னச்சால் அரசு மேல்நிலைப்பள்ளி, கூடலூர் அருகே உள்ள மரப்பாலம் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆகிய 5 வாக்குச்சாவடிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது.


Next Story