கல்லூரி நுழைவு வாயிலை அகற்ற எதிர்ப்பு; மாணவ–மாணவிகள் போராட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


கல்லூரி நுழைவு வாயிலை அகற்ற எதிர்ப்பு; மாணவ–மாணவிகள் போராட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 1 Sept 2018 9:09 PM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே கல்லூரி நுழைவு வாயிலை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதில் மாணவர்களுக்கு ஆதரவாக 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டத்தில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியின் நுழைவு வாயில் அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அந்த அரசு நிலத்தில் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் கட்டிடம் கட்டப்பட உள்ளதாக தெரிகிறது. இதையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நுழைவு வாயிலை அகற்றும்படி, கல்லூரி நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால், கல்லூரி நிர்வாகத்தினர் மறுப்பு தெரிவித்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக குழித்துறை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் பிரச்சினைக்குரிய இடத்தில் உள்ள நுழைவு வாயிலை அகற்றப்போவதாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

இதையடுத்து நேற்று விளவங்கோடு தாசில்தார் கண்ணன், கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜித்ரா மற்றும் அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் நுழைவு வாயிலை இடிக்க சென்றனர். அங்கு பாதுகாப்பு கருதி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நுழைவு வாயிலை இடிப்பதற்கு கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன், கல்லூரி மாணவ–மாணவிகள் நுழைவு வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் ஜாண் குழந்தை ஆகியோர், நுழைவு வாயிலை இடிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் ஏற்படவில்லை. இதையடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 10 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் பொக்லைன் எந்திரத்துடன் திரும்பி சென்றனர். அதன்பின்பு மாணவ– மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story