கொடைக்கானலில் கார் டிரைவர் படுகொலை: துணை நடிகையின் தந்தையை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைவு


கொடைக்கானலில் கார் டிரைவர் படுகொலை: துணை நடிகையின் தந்தையை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைவு
x
தினத்தந்தி 2 Sept 2018 5:00 AM IST (Updated: 2 Sept 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில், கூலிப்படையை ஏவி கார் டிரைவரை படுகொலை செய்த வழக்கில் துணை நடிகையின் தந்தையை பிடிக்க தனிப்படை போலீசார் ஐதராபாத் விரைந்தனர்.

கொடைக்கானல்,

சென்னை திருவான்மியூர் வால்மீகி நகரை சேர்ந்தவர் ரமேஷ்கிருஷ்ணன். அவருடைய மனைவி விஷ்ணுபிரியா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். துணை நடிகையான விஷ்ணுபிரியா, நடிகர் சூர்யா நடித்த ‘மாயாவி’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். ரமேஷ்கிருஷ்ணன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.

இதனால் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், அவரை தங்க வைத்து பராமரித்து வருகின்றனர். அவரை பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு விஷ்ணுபிரியா அடிக்கடி வந்து செல்வார். சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வரும் அவர், அங்கிருந்து கொடைக்கானலுக்கு வாடகை காரில் செல்வது வழக்கம்.

அப்போது, அவரை காரில் ஏற்றி கொடைக்கானலுக்கு அழைத்து வரும் டிரைவர் பிரபாகரன் (வயது 28) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. கொடைக்கானல் அட்டுவம்பட்டியை சேர்ந்த இவரை 2–வது திருமணம் செய்ய விஷ்ணுபிரியா முடிவு செய்தார்.

இதுகுறித்து ஐதராபாத்தில் வசித்து வரும் தனது தந்தையான சூரியநாராயணனிடம் விஷ்ணுபிரியா தெரிவித்தார். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கூலிப்படையை ஏவி பிரபாகரனை கொலை செய்ய திட்டமிட்டார். தொழிலதிபரான சூரியநாராயணனுக்கு, கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் பகுதியில் வீடு மற்றும் நிலம் உள்ளது.

கொடைக்கானலில் அவர் வீடு கட்டியபோது காண்டிராக்டரின் டிரைவராக இருந்த கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்த செந்தில்குமார் (37) என்பவருடன் சூரியநாராயணனுக்கு பழக்கம் இருந்தது. அவர், பிரபாகரனின் நண்பரும் ஆவார். இதனால் செந்தில்குமார் மூலம் பிரபாகரனை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி பிரபாகரனை கொலை செய்ய ரூ.3½ லட்சம், 13 சென்ட் நிலம் தருவதாக செந்தில்குமாரிடம் சூரியநாராயணன் கூறினார். இதனையடுத்து கடந்த 24–ந்தேதியன்று செந்தில்குமார் தனது கூட்டாளிகளான கொடைக்கானல் அனந்தகிரி 7–வது தெருவை சேர்ந்த மணிகண்டன், அண்ணாநகரை சேர்ந்த முகமது சல்மான், அவருடைய தம்பி முகமது இர்பான் ஆகியோருடன் சேர்ந்து பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார் உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான சூரியநாராயணன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் அவர் ஐதராபாத்தில் இருந்து ரெயில் மூலம் திண்டுக்கல் வந்து கோர்ட்டில் சரண் அடைய இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். திண்டுக்கல், கொடைரோடு, மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் ரெயிலில் வரவில்லை. இதனால் போலீசார் திரும்பி சென்றனர்.

இதற்கிடையே சூரியநாராயணனை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, கொடைக்கானல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான போலீசார் ஐதராபாத் விரைந்துள்ளனர்.

இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பிரபாகரனின் செல்போனை, கொடைக்கானல் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகே வீசியதாக கொலையாளிகள் தெரிவித்தனர். தற்போது அந்த செல்போன் செயல்பாட்டில் உள்ளது. அதனை கொடைக்கானல் இந்திராநகர் பகுதியை சேர்ந்த ஒருவர் பயன்படுத்தி வருகிறார். அவரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவருக்கும், இந்த கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது விஷ்ணுபிரியா, தனது தந்தையுடன் ஐதராபாத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதாவது, பிரபாகரனை கொலை செய்ய சூரியநாராயணன் திட்டமிட்டது விஷ்ணுபிரியாவுக்கு தெரியுமா? என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story