திண்டுக்கல் மாவட்ட வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்


திண்டுக்கல் மாவட்ட வரைவு பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 2 Sept 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 17½ லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களை விட 31 ஆயிரத்து 458 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

திண்டுக்கல்,

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அரசியல் கட்சியினர் முன்னிலையில் கலெக்டர் டி.ஜி.வினய் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் 8 லட்சத்து 60 ஆயிரத்து 897 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 92 ஆயிரத்து 355 பெண் வாக்காளர்கள், 144 இதர வாக்காளர்கள் உள்பட மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரத்து 396 வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட 31 ஆயிரத்து 458 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 10–ந்தேதி வெளியிடப்பட்ட இறுதி வேட்பாளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 163 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 92 ஆயிரத்து 131 பெண் வாக்காளர்கள், 150 இதர வாக்காளர்கள் என மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரத்து 444 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். தற்போது, 17 லட்சத்து 53 ஆயிரத்து 396 வாக்காளர்கள் உள்ளனர். 48 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினயிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

இறுதி வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபோது, இறப்பு, இரண்டு இடங்களில் பெயர் இடம்பெற்றிருந்தது போன்ற காரணங்களுக்காக 48 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் 55 புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்து 85 வாக்குச்சாவடிகள் உள்ளன.

மேலும், 68 வாக்குச்சாவடிகளின் இடங்கள் மாற்றப்பட்டுள்ளன. போலீசார் மூலம் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (அதாவது நேற்று) முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31–ந்தேதி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பார்வைக்கு வைக்கப்படும்.

பொதுமக்கள் அதனை பார்வையிட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஒரே தொகுதிக்குள் இடமாற்றம் போன்றவற்றுக்கு உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடி மையத்திலேயே அளிக்கலாம்.

இதற்காக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வருகிற 9, 23 மற்றும் அடுத்த மாதம் 7, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. புதிதாக பெயர் சேர்ப்பதற்கு வருகிற 1–1–2019 அன்று 18 வயது பூர்த்தியடைபவர்கள் (அதாவது 31–12–2000–க்குள் பிறந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story