அரசு பஸ் கண்டக்டரை தாக்கி ரூ.8 ஆயிரம் வழிப்பறி 2 பேர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு


அரசு பஸ் கண்டக்டரை தாக்கி ரூ.8 ஆயிரம் வழிப்பறி 2 பேர் கைது; 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 2 Sept 2018 3:45 AM IST (Updated: 2 Sept 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் அருகே அரசு பஸ் கண்டக்டரை தாக்கி ரூ.8 ஆயிரத்தை வழிப்பறி செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குடவாசல்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு எரவாஞ்சேரி, பூந்தோட்டம் வழியாக அரசு பஸ் ஒன்று தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நேற்று முன்தினம் இரவு 8.35 மணி அளவில் மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு கும்ப கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பஸ்சை ஆனந்த் ஓட்டி சென்றார். கண்டக்டராக பழனிவேல் (வயது48) என்பவர் பணியில் இருந்தார். பஸ்சில் 40 பயணிகள் இருந்தனர்.

குடவாசல் அருகே புதுக்குடி மெயின் ரோட்டில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே 3 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. அதன் அருகே 6 பேர் நின்று கொண்டு சிகரெட் குடித்து கொண்டிருந்தனர். அரசு பஸ்சின் டிரைவர் ஆனந்த், நீண்ட நேரம் ‘ஹாரன்’ அடித்தும் மோட்டார் சைக்கிள்களை அவர்கள் நகர்த்தாமல், பஸ்சை வழிமறித்து நின்றனர்.

இதனால் கண்டக்டர் பழனிவேல், பஸ்சை விட்டு கீழே இறங்கி சென்று அவர்களிடம் வழிவிடும்படி கூறினார். அப்போது 6 பேரும் சேர்ந்து பழனிவேலை மரக்கட்டைகளால் தாக்கி கீழே தள்ளினர். பின்னர் அவரிடம் இருந்த டிக்கெட் வசூல் பணம் ரூ.8 ஆயிரத்தை பையுடன் பறித்து கொண்டு தப்பியோடினர்.

இதையடுத்து பஸ்சில் இருந்தவர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் தப்பியோடிய 6 பேரையும் விரட்டி சென்றனர். இதில் 2 பேர் மட்டும் பிடிபட்டனர். அவர்கள் இருவரையும் குடவாசல் போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கும்பகோணம் மேலக்காவிரியை சேர்ந்த அரவிந்த் (23), முகமது (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அரவிந்த், முகமது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 4 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

தாக்குதலில் படுகாயம் அடைந்த கண்டக்டர் பழனிவேல், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், உதவி பொறியாளர் சங்கர் மற்றும் ஊழியர்கள் பழனிவேலிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.

அரசு பஸ் கண்டக்டரிடம் 6 பேரை கொண்ட கும்பல் வழிப்பறி செய்த சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story