தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 35 ஆயிரம் எக்டேரில் குறுவை அறுவடை முடிந்தது


தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 35 ஆயிரம் எக்டேரில் குறுவை அறுவடை முடிந்தது
x
தினத்தந்தி 2 Sept 2018 4:15 AM IST (Updated: 2 Sept 2018 2:00 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை, நாகை, திரு வாரூர் மாவட்டங்களில் 35 ஆயிரம் எக்டேரில் குறுவை அறுவடை முடிந்தது. எக்டேருக்கு 6 டன் வரை மகசூல் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள்) டெல்டா பகுதி விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம்.

குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி அதிக அளவில் நடைபெறும். தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் 4 லட்சத்து 47 ஆயிரம் எக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

ஆழ்குழாய் கிணறுகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 40 ஆயிரம் எக்டேரிலும், திருவாரூர் மாவட்டத்தில் 27 ஆயிரம் எக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 37 ஆயிரம் எக்டேரிலும் என மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் முன்பட்ட குறுவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் தற்போது வரை 8 ஆயிரம் எக்டேரில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் சராசரியாக எக்டேருக்கு 6 ஆயிரம் கிலோ மகசூல் கிடைத்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 281 எக்டேரில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் எக்டேருக்கு 6 ஆயிரம் கிலோ மகசூல் கிடைத்துள்ளது. நாகை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 534 எக்டேரில் குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன. இதில் எக்டேருக்கு சராசரியாக 6 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 35 ஆயிரம் எக்டேர் வரை அறுவடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் எக்டேருக்கு சராசரியாக 6 டன் வரை மகசூல் கிடைத்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story