மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது பெற்றோர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு


மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது பெற்றோர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Sept 2018 4:30 AM IST (Updated: 2 Sept 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் தனியார் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை மாணவிகளின் பெற்றோர் செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்,

சேலம் மெய்யனூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சதீஷ்(வயது 24) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மாணவிகளிடம் ஆபாசமாக பேசியதுடன், சில்மிஷமும் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்ததோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். ஆனால் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இந்தநிலையில் ஆசிரியர் சதீஷ் தொடர்ந்து மாணவிகளுக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து ஆத்திரம் அடைந்த பெற்றோர், ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நேற்று அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சதீசை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து பெற்றோர் சிலர் சேர்ந்து கடுமையாக தாக்கினர். குறிப்பாக பெண்கள் தங்களது செருப்புகளை கழற்றி அடித்து உதைத்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ஆசிரியர் சதீஷ் மயக்கம் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளப்பட்டி போலீசார், ஆசிரியரை அங்கிருந்து மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதையடுத்து அங்கு திரண்ட பெற்றோர் உள்ளிட்ட பொதுமக்கள், ஆசிரியர் சதீஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்க கூடாது, மாறாக பெண் ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பின்னர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக ஆசிரியர் சதீஷ் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் சதீசை கைது செய்தனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story